14-நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஹர்திக் படேல் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத், படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி 14-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்த ஹர்திக் படேலின் உடல்நிலை மோசமானதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து படிதார் அனான்மத் அந்தோலன் சமிதி அமைப்பின் செய்தித்தொடர்பாளர் மனோஜ் பனாரா கூறியதாவது:
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் படேலின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம். அவரின் ஆதரவாளர்களும் மருத்துவமனைக்கு சென்று உடல்நலனை கவனிக்குமாறு ஹர்திக் படேலிடம் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு வர சம்மதித்தார். அவரது போராட்டம் தொடரும் என்றார் மனோஜ் பனாரா.
மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "ஹர்திக் படேல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்' என்று தெரிவித்தனர்.
படிதார் அமைப்பைச் சேர்ந்த நரேஷ் படேல்கூறுகையில், "கடந்த 18 மணி நேரமாக ஹர்திக் படேல் தண்ணீர் அருந்தவில்லை. அவரது உடல்நிலை குறித்து நாங்கள் வருந்துவதாக தெரிவித்தோம். அவர், குஜராத் அரசுடன் என்னை பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறினார். ஹர்திக் படேலின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்துவோம்' என்றார்.
படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலை ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிக்கக் கோரி கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் ஹர்திக் படேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.