பெங்களூருவில் மீண்டும் சர்வதேச விமான கண்காட்சி பாதுகாப்பு அமைச்சகம் முடிவு

பெங்களூர்,பல்வேறு குழப்பங்களுக்கு பின், பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப் படைத் தளத்தில் ஏரோ இந்தியா 2018 எனப்படும் 12-வது சர்வதேச விமானக் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் பிப்ரவரி 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறவுள்ளது.
முன்னதாக பெங்களூருவில் வழக்கமாக நடக்கும் சர்வதேச விமான கண்காட்சியை உத்தரபிரதேசத்துக்கு மாற்ற பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டின் கடைசியிலேயே நடத்தவும் அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. ஆனால் சர்வதேச விமானக் கண்காட்சியை நடத்த லக்னோவில் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் பல்வேறு கட்ட யோசனைகளுக்குப் பிறகு, கண்காட்சியை பெங்களூருவிலேயே நடத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. இது குறித்த அறிவிப்பை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, 11 சர்வதேச விமான கண்காட்சிகளும் பெங்களூருவிலேயே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.