மாசுபாட்டை குறைக்கும் வகையில் பிளாஸ்டிக்கிலிருந்து கண்ணாடி பாட்டிலுக்கு மாறிய ஜனாதிபதி

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
ramnath govind 2018 1 21

புதுடெல்லி : சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயன்படுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று ஓராண்டு பூர்த்தியானது. இந்நிலையில், சுற்றுச்சூழலைக் காக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், மிக முக்கியமாக பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை குறிப்பிடலாம். கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையிலுள்ள அனைத்து அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முற்றிலும் தடை...

மேலும், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கண்ணாடி பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு, ஜனாதிபதி மாளிகையிலுள்ள அலுவலகங்களில் ஒரு மாதத்தில் சராசரியாக 1,200 ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களும், 240 அரை லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களும் பயம்படுத்தப்பட்டன. ஜூலை மாதம் 25-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாளிகையிலுள்ள தோட்டத்தின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் சுமார் 1,600 மரக்கன்றுகள் புதிதாக நடப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து