தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் கடிதம்

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      தமிழகம்
sterlite close 2018 5 28

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது தவறு என்றும், மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் கிரிஜா வைத்தியநாதன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலைக்கு எதிராக அம்மாவட்ட மக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

கவலையளிக்கிறது...

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய நீர்வள வாரியம் மேற்கொண்ட ஆய்வறிக்கையுடன் தங்கள் அலுவலக குறிப்பையும் கிடைக்கப் பெற்றோம். தமிழக அரசுக்கு தெரியாமல் மத்திய நீர்வள வாரியத்திடம் இருந்து அறிக்கையை பெற மத்திய அரசு முனைந்தது கவலையளிக்கிறது. நீண்ட பரிசீலனைக்கு பிறகே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கான ஒப்புதலை அளிக்க மறுத்தது தாங்கள் அறிந்ததே. ஸ்டெர்லைட் ஆலையால் மாசு கட்டுப்பாடு அதிகரித்து அம்மாவட்டத்தில் வாழும் மக்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

முற்றிலும் தேவையற்றது...

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அப்பகுதியில் உள்ள தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய மத்திய நீர்வள வாரியத்துக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எப்படி உத்தரவிட்டது என்பதுதான் புரியவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட விசாரணை குழுவால் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் நுழையவே முடியாது. காரணம் மாவட்ட நிர்வாகம் அந்த ஆலைக்கு சீல் வைத்து விட்டது. எனவே மத்திய அராசல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முற்றிலும் தேவையற்றது.

திரும்ப பெற வேண்டும்

இந்த அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்று தமிழக அரசு கருதுகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் தற்போது சட்டம் ஒழுங்கு நிலைமை சகஜ நிலைக்கு வந்துவிட்டது. அப்படியிருக்க இது போன்ற அறிக்கை சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படவே வழிவகுக்கும். எனவே தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான இந்த ஒட்டுமொத்த ஆய்வறிக்கையையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும். காரணம், தமிழக அரசு ஏற்கனவே இது தொடர்பாக ஆய்வு நடத்தி ஒரு முடிவும் எடுத்து விட்டது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து