முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை - அமைச்சரவை கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது குறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நீண்ட காலம் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. தமிழக அரசின் பரிந்துரையால் சிறையில் இருக்கும் 7 பேரும் மற்றும் அவரது குடும்பத்தாரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. 

முன்னதாக இவர்களின் விடுதலை குறித்து பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், சமீபத்தில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவை எடுத்து அதை கவர்னரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கலாம் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.

மத்திய அரசு மனு நிராகரிப்பு

அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அமைச்சரவை கூட்டம்

இந்தநிலையில், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரை செய்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் கூடியது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் மாலை 6 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

கவர்னருக்கு பரிந்துரை

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கவர்னரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இத்தகவலை இக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் விடுதலை பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். உச்சநீதிமன்றம் இது தொடர்பான தனது தீர்ப்பில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை குறித்து அரசமைப்பு சட்டம் 161-வது  பிரிவின் கீழ் தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டது. 161-வது பிரிவு தெளிவாக உள்ளது. அதன்படி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையின் முடிவை கவர்னர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் பின்பற்ற வேண்டும். சட்டத்தில் அப்படித்தான் உள்ளது.

இதில் எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது. மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் 7 பேரையும் விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் அதைத்தான் சொல்லி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்தான் முக்கியமானது, அதற்கு மேலானவர்கள் யாருமில்லை. அதனால் ஆளுநர் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதில் தாமதத்திற்கு வழியில்லை. மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார் ஜெயகுமார்.

முதல்வருடன் அற்புதம்மாள் சந்திப்பு

இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 7 பேர் விடுதலையை யாரும் அரசியலாக்க வேண்டாம். தமிழக அரசு வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. 28 ஆண்டு கால வலி மற்றும் வேதனைக்கு இன்று ஒரு தீர்வு ஏற்பட்டுள்ளது. 7 பேரின் குடும்பத்தில் நம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கிறார் முதல்வர். அவருக்கு எங்கள் சார்பில் நன்றி  என்று அற்புதம்மாள் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து