முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிஞர் அண்ணா - ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்:ஜெயகுமார் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,மறைந்த முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா - ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.சி.சம்பத், பென்ஜமீன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, காமராஜ், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, விஜயபாஸ்கர், சரோஜா உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு விளக்கினார் அதன் விபரம் வருமாறு:- தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபா்ட் பயாஸ், நளினி ஆகியோரின் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களில் பேரறிவாளன் அளித்த மனுவின் அடிப்படையில் அவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுக்கு உள்ள அதிகாரப்படி 161-வது சட்டப்பிரிவு அடிப்படையில் பரீசிலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரறிவாளனோடு மட்டுமில்லாமல் மற்ற 6 பேரையும் முன் விடுதலை செய்ய மேற்படி உச்சநீதிமன்றம் அளித்த சட்டப்பிரிவுப்படி கவர்னருக்கு அமைச்சரவை கூட்டம் பரிந்துரைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் கண்டிப்பாக ஏற்றே ஆக வேண்டும்.

இதில் தாமதப்படுத்துவதற்கான சூழ்நிலையெல்லாம் இல்லை மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது மாநில நிர்வாகத்திற்கு தலைவர் ஆளுநர் அமைச்சரவை கூடி அவருக்கு பரிந்துரைத்திருக்கிறது கண்டிப்பாக அதனை ஏற்பார்.திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர் அண்ணா, மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு மக்களையும் தமிழ்மொழியையும் நேசித்தவர் சரித்திரம் புகழும் சத்துணவு திட்டத்தை தந்தவர் மறைந்த முதல்வர் எம்.ஜி ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் . அவரது நூற்றாண்டு விழாவையொட்டி .சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மறைந்தும் மறையாமல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பத்துக்கோடி தமிழ் மக்களின் காவல்தெய்வம் சமூக நீதி காத்த வீராங்கனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவை ஏற்கனவே பரிந்துரைத்தது அதே பரிந்துரையை மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து