67,644 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பு : புதியவாக்காளர்களை சேர்த்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      தமிழகம்
ELECTION 09-09-2018

சென்னை,தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகளுக்காக சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் அ.தி.மு.க.வினர் ஆர்வத்துடன் செயல்பட்டு புதிய வாக்காளர்களை சேர்த்தனர்.தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில் இந்த முகாம்கள் நடைபெற்றன, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 9.30 மணி முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பங்களை பெற்று கொண்டு பூர்த்தி செய்து அளித்தனர். 2019 ஜனவரி 1 ந் தேதி 18 வயது பூர்த்தி அடையும் இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வமுடன் வந்து தங்கள் பெயரை இணைக்க விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்காக  தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டன. வருகிற 23-ம் தேதியும் சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. .

மேலும் www.elections.tn.gov.in மற்றும் nvsp.in இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிவங்களை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ம் தேதி வரை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். சென்னையில் அனைத்து வாக்குசாவடிகள் அருகிலும் அ.தி.மு.க.வினர் மேசை நாற்காலிகள் போட்டு அமர்ந்து புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியை ஆர்வத்துடன் மேற்கொண்டனர், சென்னையில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் சேர்த்தல் , முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வது குறித்து 16 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர், பல இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர், இதே போல் மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அங்கு பொதுமக்கள் வந்து பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து