Idhayam Matrimony

அமித் ஷா தலைமையில் 2019 மக்களவைத் தேர்தல்: பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் சந்திப்பதற்கு பாஜக உயர் நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பாஜக தேசிய செயற்குழுவின் 2 நாள் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் இதுவாகும்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம், அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அதில், பாஜகவின் தேசிய நிர்வாகிகளும், மாநிலத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது:கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் வரலாற்றில் அது மிகப்பெரிய சாதனையாகும். அந்த தேர்தலைக் காட்டிலும், அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மேலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். அந்த வெற்றியை உறுதிசெய்வதற்காக, பாஜக தொண்டர்கள் அனைவரும் பாட வேண்டும்.அதுமட்டுமன்றி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் உழைத்திட வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் அந்தக் கூட்டத்தில், பாஜகவின் உள்கட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கட்சியின் விதிமுறைப்படி, ஒருவர் தொடர்ச்சியாக 2 முறை தலைவர் பதவியை வகிக்கலாம்.கட்சியின் தலைவரான அமித் ஷாவின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தலும், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நடைபெற இருப்பதால், உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு குறுகிய காலமே உள்ளது. எனவே, அமித் ஷா தலைமையிலேயே பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தேர்தல் வியூகம்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவு, தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவை காரணமாக, மத்திய பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அண்மையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நீர்க்கச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அந்தச் சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், அரசின் இந்த நடவடிக்கை, சில சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் சிலரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், தலித் மற்றும் பழங்குடியின மக்களையும், பிற ஜாதி மக்களையும் சமதானப்படுத்தி, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. தலித் சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறவே, தில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பாஜக தேசிய குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தேசிய பொதுக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து