முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு தேடி வரும் அரசு சேவைகள்: டெல்லி அரசின் திட்டம் அறிமுகம்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  பொதுமக்களின் வீடு தேடி வந்து அரசாங்க சேவைகளை வழங்கும் புதிய திட்டம் டெல்லி மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

திருமண பதிவுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், ஓட்டுநர் சான்றிதழ், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த டெல்லி மாநில அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

அதன்படி டெல்லி தலைமைச் செயலகத்தில் இந்தப் புதிய திட்டத்தினை மாநில முதல்வர் கெஜ்ரிவால் நேற்று துவங்கி வைத்தார். அவருடன் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் 1076 என்ற தொலைபேசி எண்னை அழைத்து தங்களுக்கு வேண்டிய சேவைகளைக் குறிப்பிட்டால், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 'மொபைல் ஸஹாயக்' என்னும் நடமாடும் வாகனங்கள் மூலம் சேவைகள் அவர்களது வீடு தேடி வரும். இந்த சேவைகளுக்கு அவர்கள் ரூ. 50 மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும்.

மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கும் தலா 6 வீதம் 'மொபைல் ஸஹாயக்' வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த சேவை குறித்த புகார்கள் அல்லது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் முன்னர் குறிப்பிட்ட 1076 தொலைபேசி எண்ணுக்கு அழைத்துக் கூறலாம்.காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவைகள் கிடைக்கும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது:

ஆட்சி நடைமுறையில் ஒரு பழைய சகாப்தம் முடிந்து புதிய சகாப்தம் துவங்குகிறது. இனி பொதுமக்கள் அரசு சேவைகளுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. அரசு சேவைகள் உங்களைத் தேடி உங்கள் வீட்டு வாசலுக்கே வருகிறது.

டெல்லி அரசாங்கம் வழங்கும் எல்லா வித சேவைகளையும் இதன் மூலம் தர நான் விரும்புகிறேன். அரசு சேவைகள் இவ்வாறு பொதுமக்கள் இல்லம் தேடி வருவது என்பது நாட்டிலேயே அல்லது உலகத்திலேயே இதுதான் முதன்முறையாகும்.

பாஜக, மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் மூவரும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த திட்டம் சாத்தியமானதிற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே. முதலாவது சாதாரண மனிதனின் வாழ்வினை எளிமையாக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பம் மற்றும் தூய்மையான சிந்தனை.

இந்த திட்டத்தில் குறைகளிருக்கலாம். ஆனால் அந்தக் குறைகளைக் களைந்து இதனை சிறப்பாக செயல்படுத்துவோம். விரைவில் பொது விநியோக திட்டத்தினையும் இதன் மூலமே செயல்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து