பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்: டெல்லி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பங்கேற்பு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
rahul participate diesel hike 2018 9 10

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று  நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வைச் சந்தித்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தின.

புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, லாரிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள், மணல் லாரிகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், முழு அடைப்பில் பங்கேற்ற காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

டெல்லி ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அவருடன் குலாம் நபி ஆசாத், சரத் பவார், சரத் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புவனேஸ்வரில் ரயில் மறியல், மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயவாடாவில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானாவில் ஹைதராபாத் மற்றும் யதாத்ரி புவனகிரி மாவட்டம் போங்கில் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர், குஜராத் மாநிலம் பரூச் நகரில் போராட்டக்காரர்கள் சாலையின் நடுவே டயர்களை கொளுத்திப் போட்டு பேருந்து போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து