காங்கிரஸ் தலைமையை சிறு கட்சிகள் கூட ஏற்காது- பிரதமர் மோடி பேச்சு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
pm modi 2017 12 31

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைமையை சிறு கட்சிகள் உள்பட எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில்  நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பேசியது குறித்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி பேச்சு:

2019 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.-வை எதிர்கொள்ளும் திறனற்றதாக எதிர்க்கட்சி இருக்கிறது. ஏனெனில், அவர்கள் பிரச்னைகளின் அடிப்படையில் இல்லாமல் பொய்களின் அடிப்படையில் போட்டியிட விரும்புகிறார்கள்.

நாங்கள் கொள்கையின் அடிப்படையில் போட்டியிட தயாராக இருக்கிறோம். பொய்களின் அடிப்படையில் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மகா கூட்டணி அமைய வாய்ப்பில்லை. ஏனெனில், அவர்களுக்கு தலைமை யாரென்று தெரியவில்லை. கொள்கை தெளிவற்றதாக இருக்கிறது. ஊழல் மட்டுமே அவர்களது நோக்கமாக உள்ளது.

அமித்ஷா பேச்சு:

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும். அந்த அளவுக்கு பாஜக சாதனைகளை செய்துள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக-வை யாராலும் வீழ்த்த முடியாது.

நாட்டின் தற்போதைய அரசியல் என்பது செயல்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது.

மோடிக்கு எதிராக இலக்கு: முன்னதாக, "எதிர்க்கட்சிகளுக்கு தலைமை என்பதோ, கொள்கை என்பதோ கிடையாது; நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுக்க வேண்டும் என்பதே அவர்களது ஒரே நோக்கம்'' என்று பா.ஜக. செயற்குழுவில் குற்றம்சாட்டப்பட்டது.

பா.ஜ.க.-வை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்டுள்ள நம்பிக்கை பகல் கனவாகவே முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், அரசியல் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை நாங்கள் கட்டமைப்போம். மத்திய அரசுக்கு இலக்கு, ஆர்வம், கற்பனை வளம் என அனைத்தும் இருக்கிறது. இந்த அரசின் செயல்பாடுகளை நீங்களும் கவனித்து வருகிறீர்கள். நாட்டில் அவ்வப்போது நடைபெற்று வந்த பயங்கரவாத தாக்குதல்கள் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டில் பயங்கரவாதம், ஜாதியவாதம், மதவாதம் என்பதே நாட்டில் இருக்காது. யாரும் வீடு இன்றி இருக்கமாட்டார்கள். எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளன. அவர்களுக்கு தலைமை என்பதோ, கொள்கை என்பதோ கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறக் கூடாது என்பதே அவர்களது நோக்கம்.
நாட்டில் மிக பிரபலமான தலைவராக மோடி இருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் கூட, அவரை ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக உள்ளது.

2014-இல் மக்களவைத் தேர்தலில் பெற்ற இடங்களைக் காட்டிலும் அதிகப்படியான இடங்களுடன் 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார் ஜவடேகர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து