என்ஜினியர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்க புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை: முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      தமிழகம்
cm edapadi release 2018 9 10

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை 2018-ஐ வெளியிட்டார். அதில் என்ஜீனியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மின் கட்டண விலக்கு, மானியம் ஆகியவை இந்த புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில் நுட்ப துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், என்ஜினீயர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்த தொழில் நுட்ப கொள்கையில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளை பயன்படுத்தி தொழில் அதிபர்கள் அதிக அளவில் தொழில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது கேட்டுக் கொண்டார். புதிதாக தொழில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை மின் கட்டணம் இலவசம் மற்றும் மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கலந்தாய்வு கூட்டம்

பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை -2018 வெளியீடு நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் புதிய தொழில் நுட்பவியல் கொள்கை 2018-ஐ முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். புதிய தொழில் நுட்பவியல் கொள்கையில் ஏராளமான சலுகைகளும், மானியங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கட்டணத்தில் சலுகை...

5 கோடி ரூபாயிலிருந்து 50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த நிறுவனம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மின் கட்டணம் கிடையாது. 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை தொழில் முதலீடு செய்பவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இந்த நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை மின் கட்டணம் கிடையாது. இந்த நிறுவனம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

5 ஆண்டுகள்...

100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். 4 ஆண்டுகள் மின் கட்டணம் கிடையாது. 2 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். 200 கோடி முதல் 500 கோடி வரை முதலீடு செய்பவர்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். 4 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் மின் கட்டணம் கிடையாது.

நிபந்தனை...

எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ அத்தனை பேருக்கும் கண்டிப்பாக வேலை கொடுத்தாக வேண்டும். ஆரம்பத்தில் இவ்வளவுபேருக்கு வேலை தருவோம் என்று கூறிவிட்டு பின்னர் அவ்வளவு பேருக்கு வேலை தர முடியவில்லை என்று சொன்னால் அதனை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கெங்கு தொழில் துவங்கலாம் என்று மாவட்டங்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பிரிவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து