திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மறியல் _ 750 பேர் கைது

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
11 dgldiesel  news

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக்கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தில் 750 பேர் கைது செய்யப்பட்டனர்.
வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை, எரியோடு, வேடசந்தூர். வடமதுரை, நத்தம், தாடிக்கொம்பு, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு, சின்னாளபட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரணி மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தபால் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சார்பில் மோட்டார் சைக்கிளை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பஸ் நிலையத்தில் திறந்திருந்த கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டினர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் அவர்கள் பிரதமர் மோடியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர். இதைப் பார்த்ததும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவபொம்மையை போலீசார் அவர்களடம் இருந்து பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 68 பெண்கள்உட்பட 750 பேர் கைது செய்யபட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் அறிவித்த போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. ஒருசில கடைகளைத் தவிர 90 சதவீதத்திற்கும் அதிகமான கடைகள் திறந்திருந்தன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன. ஆட்டோக்களும் முழுமையாக இயங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து