முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடின

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த நாடு தழுவிய பந்த் போராட்டத்தால் தமிழகத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல் ஓடின.

போராட்டம்...பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்தது. தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு இருந்ததால் இந்த பந்த் போராட்டம் தமிழகத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாதிப்பில்லை...ஆனால் தமிழகம் முழுவதும்  இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று வழக்கம் போல் பஸ், ரயில்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. தனியார் பள்ளி வாகனங்களும் ஓடின. சென்னையில் உள்ள 38 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அங்குள்ள 2400 கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

பலத்த பாதுகாப்பு...இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கடைகளை மூடி இருந்தனர். விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த பந்த் போராட்டத்தையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை கமிஷனர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். மதுரையிலும் பஸ்கள், பள்ளி வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன.

வன்முறை சம்பவங்கள்...இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நாட்டின் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்தனர். பீகாரில் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது. இதில் கண்ணாடிகள் உடைந்தன. மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர், அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களைக் கைது செய்தனர். பீகாரில் பந்த் போராட்டத்தின்போது, வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் 2 வயது குழந்தை ஒன்று உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து