தினந்தோறும் எகிறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      தமிழகம்
petrol -diesel price 2018 5 23

சென்னை,சென்னையில் நேற்றும் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.05 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டு வந்தது.

தினந்தோறும் உயர்வு...ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது.

மத்திய அரசு மவுனம்...இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.84.05 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.13 ஆகவும் விற்பனையாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து