முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீதுள்ள குற்றவியல் வழக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - ஐகோர்ட் பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் அஷ்வின் உபத்யாய சார்பாக ஆஜரான வழக்குரைஞர், சிறப்பு நீதிமன்றங்கள் நடைமுறையில் செயல்படுகிறதா என்பதை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு உதாரணமாக, போஸ்கோ சிறப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகளே இல்லாமல் செயல்பாடற்ற நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய சட்ட அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 1,233 குற்றவியல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில், 136 வழக்குகள் முடிவடைந்து இன்னும் 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரமாணப் பத்திரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்ஹா மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு திருப்தியளிக்கவில்லை. இதன் காரணமாக எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து குற்றவியல் வழக்குகளின் விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஐகோர்ட் பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 2017 டிசம்பர் உத்தரவுப்படி, வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டதா என்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்குமா என்பது குறித்து தெரிந்து கொள்ள சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து