முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாமில் நிலநடுக்கம்; மேலும் 4 மாநிலங்களில் நில அதிர்வு

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : அஸ்ஸாம் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்

எதிரொலியாக மேகாலயம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

நேற்று முன்தினம் காலை 10.20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 15 முதல் 20 விநாடிகள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள மத்திய நிலநடுக்கம் பற்றிய ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாகவும், அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜ்பூர் நகரத்தில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பகுதியை மையமாக கொண்டு நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா நகரின் சில பகுதிகளிலும், வடக்குப்பகுதியிலுள்ள 6 மாவட்டங்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  சிலிகுரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பின் மாடிப்படியில் இருந்து விழுந்த 22 வயது இளைஞர் சாம்ராட் தாஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது தாயார் உஷாதாஸ் என்பவர் கூறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர். இருப்பினும் அங்கு மக்களின் உடைமைகளுக்கோ, உயிருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிகாரில் பாட்னா, பாகல்பூர், அராரியா, கிஷண்கஞ்ச், சாஹர்ஷா, மாதேப்புரா, முங்கூர் மற்றும் பெகுசராய் ஆகிய பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது. பாட்னாவில் சில கட்டடங்களில் ஏற்பட்ட விரிசலால் மக்கள் பீதியடைந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் டும்கா, பாகூர், ஷாகிப்கஞ்ச் மற்றும் கோட்டா மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேகாலய மாநிலம் ஷில்லாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் நிலநடுக்கம்:

 காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கார்கில் நகரத்தில் இருந்து வடக்கே 199 கிமீக்கு அப்பால் லடாக் பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து