முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அதிகாரிகள் அத்துமீறல்: முல்லைப் பெரியாறு அணை மத்திய படையை நிறுத்தக் கோரிக்கை

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில், கேரள அதிகாரிகளின் அத்துமீறலையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்திவைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முல்லைப் பெறியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோது கேரள அரசின் சிறு பாசன விவசாய அலுவலர்கள் எப்போதாவது வந்து பார்வையிட்டு செல்வர். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் நீர்மட்டம், 142 அடி உயர்ந்ததில் இருந்து, தினமும் அணையை அவர்கள் பார்வையிட்டு வருகைப் பதிவேடு, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை பதிவேடுகளில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலை நீடித்தால், மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவிடம், அணையை கேரள அரசே பராமரித்து வருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் முன்னர் அணையின் பராமரிப்புக்கு தமிழக பொதுப்பணித் துறையினர் கொண்டு செல்லும் தளவாடப் பொருள்களுக்கு, கேரள வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்தால் போதுமானதாக இருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக, கேரள மாநில சிறு பாசன விவசாயத்துறையின் அனுமதி கடிதம் வாங்கி, அதன் பின் வனத்துறையின் துணை இயக்குநர் பரிந்துரைத்த பின்னரே கொண்டு செல்ல அனுமதித்து வருகின்றனர்.

ஏற்கெனவே பல ஆண்டுகளாக தமிழக பொதுப்பணித்துறையின் தமிழ் அன்னை படகை இயக்க அனுமதி தராதது, கடந்த ஆகஸ்ட் மாதம் நீர்மட்டம் 142 அடியை எட்டிய போது, மதகை திறக்க கேரள காவல் துறையினர், கோட்டப் பொறியாளரை மிரட்டியது, தரை வழி மின்சார இணைப்பை தராமல் இழுத்தடித்தது, மழை வெள்ளத்தால் சேதமான வல்லக்கடவு சாலை கல் பாலத்தை செப்பனிடாமல் காலம் கடத்துவது போன்ற சம்பவங்கள் தமிழகம் தனது உரிமைகளை இழந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேனி மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலர் அ.திருப்பதிவாசகன் கூறியது:

கேரள அதிகாரிகளின் அத்துமீறல் குறித்து உடனடியாக மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து, அணைப் பகுதியின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையையும், தமிழக போலீஸாரையும் நிறுத்த வேண்டும். கம்பத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தை தேக்கடிக்கு மாற்றி, தனியாக பொறியாளர்களை நியமித்து பறிபோன உரிமைகளை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு புதன்கிழமை கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து