முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டியது அவசியம் கட்சியினருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மடல்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று கட்சியினருக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். மடல் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள மடலில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடித் தொண்டர்களையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில், நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்வின் மூலம் ஆற்றிய பணிகள் இந்திய நாட்டின் அரசியல் போக்கினை மாற்றியதோடு மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் ஒவ்வொன்றும் அவற்றைப் பேசும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படவும், தொன்மை சிறப்பு வாய்ந்த இந்தியப் பண்பாடு புதிய கோணத்தில் புரிந்துகொள்ளப்படவும் காரணமாக அமைந்தன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

நிகழ்த்திக் காட்டினார்....இந்தியத் திருநாடு வலுப்பெற்றும், பொருளாதார வளம் பெற்றும் உயர்ந்திட வேண்டுமானால், இந்நாட்டின் மாநிலங்கள் வலிமை பெறவேண்டும்; மாநில மொழிகள் மதிக்கப்பட வேண்டும்.ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பனவற்றை எல்லாம் எடுத்துரைத்து, அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்த மாமேதை பேரறிஞர் அண்ணா. மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன் முதலாக நிகழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் நம் நாட்டில் தோன்றி, மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதும், அதன் காரணமாக அந்தந்த மாநிலங்களின் மொழிகள், பண்பாடு, நாகரீகம், புத்துயிர் பெறுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சமத்துவ வழியில்தான்... ஓய்வறியா கடும் உழைப்பால், அறிவுத்திறத்தால் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகத்தான் எம்.ஜி.ஆரும், அம்மாவும் சிறப்பான ஆட்சிகளை நடத்திக் காட்ட முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, புரட்சித் தலைவி அம்மா அமைத்துத் தந்த கழக அரசு இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக வெற்றிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்றால், அது அண்ணா எடுத்துரைத்த சமத்துவ, ஜனநாயக வழியில்தான் சாத்தியமாகும் என்பதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நன்கு உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான், தான் ஆரம்பித்த மக்கள் இயக்கத்திற்கு ``அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’’ என்று இயக்கத்தின் பெயரிலேயே அண்ணாவின் திருப்பெயரை இணைத்தார்கள்.

தொடர்ந்து நடைபோடும்...பேரறிஞர் அண்ணா காண விரும்பி, அயராது உழைத்த புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைப்பதற்கு தனது ஆற்றல் முழுவதையும் செலவிட்டார் புரட்சித் தலைவி அம்மா. பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைத்த மக்கள் நலப் பணிகளை மிகப்பெரிய அளவுக்கு விரிவுபடுத்தி, எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் திட்டங்களை நாடு போற்றும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார் புரட்சித் தலைவி அம்மா. தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் வகுத்தளித்த பாதையில் கழக அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்ல செய்தி வரும்...பேரறிஞர் அண்ணாவின் அரும் பணிகளையும், சாதனைகளையும், சிறப்புடன் நினைவுகூர்ந்து, அவருக்கு ``பாரத் ரத்னா’’ விருது வழங்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். இது குறித்து பாரதப் பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் இது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

வெற்றி பெறுவது அவசியம்...பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, ஆகியோரது வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் தொண்டாற்றுவதற்கு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்று, கழக அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்பதை கழக உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம். பேரறிஞர் அண்ணாவின் புகழ் காப்போம்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடப்போம்; புரட்சித் தலைவி அம்மா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வெற்றி மேல் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து