முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தடைகளால் ரஷ்யாவுடனான உறவு பாதிக்கப்படுவதை இந்தியா அனுமதிக்காது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அமெரிக்க தடைகளால் ரஷியாவுடனான பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படுவதை இந்தியா அனுமதிக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் விளாடிமீர் புடின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவுக்கு நீண்ட கால பாதுகாப்பு கூட்டாளியாகவும், முக்கிய ஆயுத தளவாடங்களை விற்பனை செய்யும் நாடாகவும் ரஷியா திகழ்கிறது. அந்நாட்டிடம் இருந்து ரூ.40,000 கோடி மதிப்பில் எஸ்-400 ரக வான்பாதுகாப்பு சாதனத்தை வாங்குவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்தியா-ரஷியா வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியாவுக்கு ரஷிய அதிபர் விளாடிமீர் புடின் வருகை தரவுள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், இருதரப்பு உறவை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கிரிமியா பகுதியை ரஷியா இணைத்து கொண்டதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள ரஷிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து கொள்ளும் நாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? என சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும், எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷியாவிடம் இருந்து வாங்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்காவிடம் இந்தியா ஏற்கெனவே தெரிவித்து விட்டது.

இந்நிலையில், டெல்லியில் பி.டி.ஐ. செய்தியாளருக்கு பேட்டியளித்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளால், ரஷியாவுடனான பாதுகாப்பு உறவு பாதிக்கப்படுமா? என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், அமெரிக்க தடைகளால் ரஷியாவுடனான பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படுவதை இந்தியா அனுமதிக்காது. எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் தொடர்பாக ரஷியாவுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தை ஏறத்தாழ நிறைவடைந்து விட்டது. விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விடும். பிற நாடுகளுடனான உறவில் இந்தியா, சொந்தமாக முடிவெடுக்கும்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து