முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு: தமிழகத்திற்கு 16 வேகன் நிலக்கரி அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் - மத்திய அமைச்சரை சந்தித்தப்பின் அமைச்சர் தங்கமணி தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, நேற்று புதுடெல்லியில் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து 20 வேகன்களில் நிலக்கரி அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் கோயல், 16 வேகன்களில் நிலக்கரி அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தங்கமணி தெரிவித்தார்.

புது டெல்லியில் ரயில் மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஷ் கோயலை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் பிறகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்விபரம் வருமாறு:-

தமிழகத்தில் எதிர்கட்சிகள் எல்லாம் அரசியல் செய்வதற்காக மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்பி கொண்டியிருக்கின்றார்கள். தமிழகத்தில் எப்பொழுதுமே மின்வெட்டு வராது. மின்வெட்டு வராது மட்டுமல்லாமல் மின் மிகை மாநிலமாகவே இருந்து வருகிறது. இந்த அளவுகோளை மத்தியரசினுடைய சமன்பாட்டு அறிக்கையிலேயே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நான் கடந்தமுறை பேட்டி அளிக்கின்ற பொழுது, மே மாதம் கடைசி வரையிலிருந்து செப்டம்பர் மாத கடைசி வரையில் அல்லது அக்டோபர் முதல் வாரம் முதல் காற்றாலை மின்சாரம் இருக்கும். அந்த காற்றாலை மின்சாரம் இருக்கின்ற பொழுது அனல் மின் நிலையங்கள் எல்லாம் பாரமரிப்பு பணிக்காக (மத்திய தொகுப்பிலிருந்து வருகின்ற அனல் மின் நிலையம் மற்றும் மாநிலத்தின் அனல் மின்நிலையம்) 2 மாத காலங்களுக்கு எடுத்து க்கொள்ளப்படும் என்றேன்.

சில இடங்களில்...

செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் திடீரென்று 3000 மெகாவாட்டிலிருந்து ஜிரோவுக்கு வந்துவிட்டது. அன்றைய தினம் மற்றும் 10-ம் தேதி அன்றும் அரைமணி நேரம் தமிழகத்தில் சுழற்ச்சி முறையில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஆகையால் அடுத்த நாள் நாங்கள் உடனடியாக அனல் மின் நிலையங்களை செயல்படுத்தியும் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து உடனடியாக மின்சாரம் தர வேண்டும் என்று கேட்டு நடவடிக்கை எடுத்ததால் தமிழகத்தில் அடுத்த நாளிலிருந்து சகஜநிலை திரும்பிவிட்டது.

நிலக்கரி வர தாமதம்

நிலக்கரியை பொறுத்தவரை எப்பொழுதுமே தமிழ்நாடு அனல் மின் நிலையம் 15 நாட்களுக்கு வேண்டிய நிலக்கரியை வைத்திருப்போம். அந்த அடிப்படையில் தான் கடந்த 3 மாதகளாக 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் இருந்தது. கடந்த வாரத்தில் ஒடிசாவில் மழையிருந்த காரணத்தால் ஒரு வார காலம் அங்கேயிருந்து நிலக்கரியை கொண்டுவர வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால் அந்த கையிருப்பு குறைந்து விட்டது. உடனடியாக நிலக்கரி நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலக்கரி வரத்தை உயர்த்த வேண்டுகோள் விடுத்து அதன்படி நிலக்கரியை அதிகமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் 3 நாட்கள் மேட்டூரிலும் வடசென்னையில் 3 நாட்களும் தூத்துக்குடியில் 6 நாட்களும் கையிருப்பு இருக்கின்றது.

மத்திய அமைச்சர் சம்மதம்

இன்றைய தினம் மத்திய இரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தினந்தோரும் கொடுக்கின்ற ரயில் ரேக்குகளை 16 ஆக உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் கையிருப்பை அதிகப்படுத்துவதற்காக இன்னும் 4 ரேக்குகளை சேர்த்து 20 ரேக்குகளாக கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் 16 ரேக்குகள் தருவதாக கூறியிருக்கிறார். சூழ்நிலை சரியானதும் அதிகரித்து கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

தவறான பிரச்சாரம்

நேற்று காலையில் மின் நுகர்வின் அளவு குறைவாக இருந்ததன் காரணத்தினால் தூத்துக்குடியில் 210 மெகாவாட்டை உற்பத்தியை நாங்கள் குறைத்து இருக்கிறோம். நிலக்கரி இல்லையென்று குறைக்கவில்லை, வேண்டுமென்றால் நிருபர்களை அழைத்துச்சென்று கையிருப்பு நிலக்கரிகளை காட்டுகின்றேன். ஆனால் எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். மின்நுகர்வு குறைந்திருக்கின்ற காரணத்தினாலே தூத்துக்குடியில் 210 மெகாவாட்டையும் அதேபோல மேட்டூரில் 420 மெகாவாட் அளவையும் குறைத்திருக்கிறோம். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபெய்து கொண்டு இருக்கின்ற காரணத்தால் மின் தேவையும் குறைந்திருக்கின்றது.

மின்வெட்டு வராது

அதேபோல் இன்றைய தினத்திலிருந்து காற்றாலை மின்சாரமும் 2000 மெகாவாட் வந்திருக்கின்ற காரணத்தினால் அதிகமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நாம் இருப்பு வைக்கமுடியாது. அதனால் அனல் மின் நிலையத்திலுள்ள மின்சார உற்பத்தியை குறைத்திருக்கிறோம். இது ஏதோ மக்கள் மத்தியில் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும் என்பதுபோல ஒரு தவறான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என்று தெளிவாக சொல்வதற்கு கடமைபட்டிருக்கிறேன்.

பரிசீலிப்பதாக உறுதி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியதற்குப்பின் 2 நாட்களாக 8 ரேக்குகள் வந்து கொண்டிருந்தது. இப்பொழுது 13 ரேக்குகளாக உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய முன்தினம் கூட 17 ரேக்குகள் அனுப்பியிருக்கிறார்கள். இன்றைய தினத்திலிருந்து 16 ரேக்குகள் தினந்தோரும் அனுப்புவதாக கூறியிருக்கிறார்கள், நிலக்கரியின் கையிருப்பை அதிகபடுத்த வேண்டும் என்பதற்காக 20 ரேக்குகளை கேட்டிருக்கிறோம். முடிந்தவரை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

விரைவில் நடவடிக்கை

ஏதோ தமிழகத்தில் பெரிய மின்வெட்டு வருவதைப்போல ஒரு பீதியை கிளப்பி விட்டார்கள். எப்போது எல்லாம் குறைகின்றதோ அப்போதெல்லாம் மத்திய அரசை சந்தித்து நாங்கள் அதிகப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். அவர்களும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்பொழுது இருப்பு குறைவாக இருப்பதால் நாங்கள் வெளிநாட்டிலிருந்து 30 லட்சம் டன் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி கொடுத்திருக்கின்றார்கள். டெண்டர் போட்டு இருக்கின்றோம் இப்போழுது தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 6 லட்சம் டன் உடனடியாக ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்கின்றது. மீதி நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் மிகை மாநிலமாக...

பொதுவாக எந்த மாநிலத்தை எடுத்தாலும் அவர்களே முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்து அதை மின் மிகை மாநிலமாக ஆக்க முடியாது. மத்திய தொகுப்பிலிருந்து ஏன் வாங்குகிறீர்கள் என கேட்கலாம். மத்திய அரசு யாருக்கு கொடுக்கிறது மாநில அரசுக்குதானே கொடுக்கிறது. எல்லா மாநிலத்திற்கும் பிரித்து கொடுக்கிறார்கள். கூடங்குளம் மின்சாரம் நமக்கு 50 சதவீதமும் மற்ற மாநிலங்களுக்கு மீதியையும் பிரித்து கொடுக்கிறார்கள். அப்படி மத்திய தொகுப்பிலிருந்து வருவது, அதே போல தனியார் கொடுப்பது மத்திய அரசு அதை கேட்டு வாங்கி அதையெல்லாம் சேர்த்தால்தான் வருமே ஒழிய எந்த மாநிலத்திலுமே சொந்த உற்பத்தியை வைத்து மின் மிகை மாநிலமாக இருக்காது.

முழு உற்பத்தியை...

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலேயும் கிடையாது. எதிர் கட்சிகள் தவறான அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) கூட ராமதாஸ் சொல்லியிருக்கிறார். எப்போதுமே தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது இல்லை என்று சொல்லியிருக்கின்றார். நான் தெளிவாக சொல்லுகின்றேன் இந்திய சமன்பாட்டு அறிக்கையிலேயே தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருக்கிறது என்று. ஆனால் ஒரு மாநிலமே தேவையான அளவு முழு உற்பத்தியை செய்ய முடியாது. எல்லா மாநிலமுமே மத்திய தொகுப்பிலிருந்து வாங்குகின்றார்கள் அதைபோல தனியாரிடமும் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

18,000 மெகாவாட்...

நமக்கு 15,000 மெகாவாட் இன்றைக்கு தேவை. நம்மிடம் 18,000 மெகாவாட் இருக்கின்றது. இதில் காற்றாலை, சூரிய மின்சக்தி கிடையாது. இதெல்லாம் இல்லாமல் 18,000 மெகாவாட் இருக்கின்றது. ஆக தமிழகம் எப்பொழுதுமே மின் மிகை மாநிலம் தான். இதை எத்தனை எதிர்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை செய்தாலும் இப்பொழுது பத்திரிக்கை நண்பர்கள் இருக்கின்றீர்கள், அவர்கள் சொல்கின்றார்கள், எதிர்கட்சிகள் சொல்கின்றார்கள், யாராவது உங்களுடைய நண்பர்களை, உங்கள் வீட்டிலேயேகூட கேட்டுப்பாருங்கள். ஏதாவது ஒரு நிமிடம் தமிழகத்தில் மின் வெட்டு இருந்திருக்கின்றதா என்று. சீர்காழியில் காற்று மழையினால் கிட்டத்தட்ட 238 மின் கம்பங்கள் வீழ்ந்து விட்டன. அதை சரிசெய்வதற்கு ஒரு நாள் ஆகலாம், உடனடியாக அதை தவறான பிரச்சாரம் செய்கின்றார்கள் மின்வெட்டு என்று.

அரசியலுக்காக அவதூறு...

இயற்கை சீற்றத்தில் மின்கம்பங்கள் விழுவது, டிரான்ஸ்பார்மர்கள் விழுவது என்பது சாதாரனமான ஒன்றுதான். அதை ஓரிரு நாட்களில் நாங்கள் சரி செய்கிறோம். வர்தா புயல் டிசம்பர்ல வந்தப்ப வந்த வேகத்திலே மின்சாரவாரியம் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் மூன்று நாட்களிலேயே 100 சதவீத மின்சாரத்தை கொடுத்தோம். இதையே நீங்க அமெரிக்காவில் பார்த்தால் 10 நாட்கள் ஆகும். விசாகப்பட்டிணத்தில் 10 நாட்கள் ஆகும். ஆனால் மின்சார வாரியம் தொடர்ந்து அரசு வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் கிடையாது. அதேபோலவே ஒக்கிபுயல் கடந்த வருடம் கன்னியாகுமரியில் வந்தது. கிட்டதட்ட 50 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன. அன்றே அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றிக்கு மின்சாரம் கொடுத்துவிட்டோம். மூன்று நகராட்சிகளுக்கு 2 நாட்களில் மின்சாரம் கொடுத்துவிட்டோம். அவ்வளவு வேகமாக உயிரை பணயம்வைத்து மின்சாரவாரிய தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். வேண்டுமென்றே அரசியலுக்காக அவதூறு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தி.மு.க ஆட்சியில் கூட...

எதிர்பாராதவிதமாக செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் முழுமையாக நின்று விட்டது. அதனால் தான் அந்த 2 நாட்கள் பிரச்னையும் வந்தது. நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்பது சரியில்லை. மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களிளும் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாகத்தான் உள்ளது. அங்கெல்லாம் நிலக்கரியை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில்தான் நிலக்கரியை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் கூட நிலக்கரி ஒரு நாள் மட்டுமே இருப்பு இருந்ததை மறந்து விட முடியாது. அரசியல் செய்வதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் இதை வைத்து கொண்டு மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதி கிளப்புகிறார்கள்.

நாங்கள் திரும்ப திரும்ப சொல்கிறோம் தமிழகம் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் மின்சாரத்தை எடுத்து செல்லும் மின் தொடரமைப்பு வசதி குறைவு என்பது தவறானது. தமிழக அரசு 5000 மெ.வாட் அளவிற்க்கு மின் தொடரமைப்பு வசதியை செய்துள்ளது. இதுவே தி.மு.க. ஆட்சியில் இந்த அளவிற்கு செய்யவில்லை. நாங்கள் அதிக அளவில் மின் கட்டமைப்பு வசதியை அதிகபடுத்தியுள்ளோம்.

உற்பத்தி குறைக்கப்படும்...

இன்று மின் நுகர்வு குறைந்துள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியை குறைத்து உள்ளோம். ஆனால் ஊடகங்கள் நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தம் என்கிறார்கள். காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் போது அனல் மின் உற்பத்தி குறைக்கப்படும். அப்போது தவறான பிரசசாரத்தை செய்கிறார்கள். காற்றாலை மின்சாரத்தை நாங்கள் முழுவதுமாக பயன்படுத்துகிறோம் இல்லையென்றால் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று ஆணை பெறுவார்கள். காற்றாலை மின் உற்பத்தி குறையும் போது அனல் மின் உற்பத்தியை துவக்க சுமார் 12 மணி நேரம் ஆகும். அதனால் தான் 9 மற்றும் 10ம் தேதிகளில் மின் பிரச்னை ஏற்பட்டது. இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து