முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 கோடி எழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்:பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி,10 கோடி எழை குடும்பங்களுக்கு  மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று  துவக்கி வைத்தார்.ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 10.74 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனசங்கத்தை உருவாக்கிய தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினம் வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட இருக்கிறது.நாட்டு மக்களில் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரும் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர உரையின்போது அறிவித்தார்.

அப்போது இந்தத் திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:-சாமானிய மக்கள் அனைவருக்கும் சிறப்பானதொரு மருத்துவ வசதியை அளிக்கும் நோக்கத்தில் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் எத்தகைய தீவிரமான நோய்களுக்கும் சிறந்த மருத்துவமனைகளில் ஏழை மக்கள் இலவசமாக சிகிச்சை பெற முடியும். 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு கிடைப்பது உறுதி செய்யப்படும்.இதன் மூலம் ஏழை மக்கள் இனி மருத்துவச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் தவிக்கும் நிலையும் முடிவுக்கு வரும். இத்திட்டத்தின் மூலம் புதிய மருத்துவமனைகள் திறக்கப்படும். இதனால் இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இது வெறும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மட்டுமல்ல, மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமும் கூட. மருத்துவச் செலவு குறைவதன் மூலம் ஏழை மக்களின் வறுமை ஒழியும் என்றார்.

இந்நிலையில், இத்திட்டத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா என்றும் இத்திட்டம் அழைக்கப்படும். கடந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.சர்வதேச அளவில் ஒரு நாட்டின் அரசால் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதமாகவும் இருக்கும். பயனாளிகள் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காக பணம் ஏதும் செலுத்த வேண்டாம்.

இந்தத் திட்டத்தில் 80 சதவீதம் பயனாளிகள் சமூக, பொருளாதார, ஜாதிய மக்கள்தொகை புள்ளிவிவர அடிப்படையில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் கரோனரி பைபாஸ் சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்டிங் பல்வேறு சிகிச்சைகள் பெறுவதற்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயமல்ல என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட இதர அரசு அடையாள அட்டைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து