முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த பள்ளியையும் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

ஈரோடு,எந்த பள்ளியையும் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஈரோடு பெரிய சேமூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார்  பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்து அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்த வரை 2 துறைகள் ஈரோடு மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. 2 துறைகளிலும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடப்பதை மக்கள் கண் கூடாக பார்த்து வருகிறார்கள். ஏரிகள், குளங்களை எல்லாம் தூர்வார பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அதற்கான நிதிகளை ஒதுக்கி 3, 4 ஏரிகளை சிறந்த முறையில் மக்கள் மதிக்கத்தக்க வகையில் மாற்றி அமைத்திருக்கிறார். அதற்கான தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. நடைபாதைகளில் மக்கள் நடந்து சென்று வருகிறார்கள். குளங்களும் சீரமைக்கப்பட்டிருக்கிறது.முதல்வருடன் அமைச்சர் கலந்து பேசும் போது மிக விரைவில் நமது மாநிலம் இந்தியாவுக்கே வழி காட்டியாக பாலித்தீன்களை மாநிலத்தில் பயன்படுத்துவதில்லை என்று சூளுரை ஏற்கப்பட்டுள்ளது.
பெரியசேமூர் பள்ளியை உயர் நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே வரும் ஆண்டு இது பற்றி அரசு பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கும். பள்ளி கல்வித்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பாக பணியாற்றாத சில இடங்களில் இருக்கும் பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களை உடனடியாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது. சிறந்த முறையில் பணியாற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.

அரசின் கொள்கை முடிவின் படி எந்த பள்ளியையும், அந்த பள்ளியின் வளாகத்தில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்ற எந்த பரிசீலனையும் எந்த ஆய்வும் இல்லை. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்குள் மாணவர்கள் 1315 பள்ளிகளில் இருக்கிறார்கள். செலவும் அதிகமாகிறது. ஆனால் எந்த பள்ளியையும் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.போராட்டம் செய்வோம் என்று கூறுகிறவர்கள் கூடுதலாக மாணவர்களை பள்ளியில் எப்படி சேர்க்க முடியும்? எப்படி பள்ளிக்கு 50 மாணவர்களை கொண்டு வரும் அளவுக்கு சீரமைக்க முடியும்? என எடுத்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால் ஒரு மாணவர் 2 மாணவர் இருக்கிறார் என்று சொன்னால் ஒரு மாணவருக்கு குறைந்த பட்சம் ரூ. 6 லட்சம் அரசு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே மக்கள் வரி பணத்தை எவ்வாறு வழி நடத்துவது? எப்படி மாணவர் சேர்க்கையை கூடுதல்படுத்துவது? என்று ஆலோசனை தர வேண்டும். அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளை அரசு பள்ளியுடன் இணைக்கும் நோக்கம் அல்ல. குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி பயிற்சி அளிக்க ஆங்கிலம், தமிழ் சிறப்பாக கற்று கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். 3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். இந்திய துணை கண்டத்திலேயே அதிக ஆசிரியர்கள் இருப்பது இங்கு தான். ஏதோ ஒரு இடத்தில் தவறு ஏற்பட்டால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட நிலை எதிர் காலத்தில் வரக்கூடாது. ஆசிரியர் மீது புகார் எழுந்தால் விசாரணையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஆசிரியர் மீது போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரியரை தேடி கைது செய்யவும் முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பேட்டியின் போது சட்ட மன்ற உறுப்பினர்கள்கே.வி இராமலிங்கம்-,கே. ஏ தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து