முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மகாளய பட்சம் ஆரம்பம்: அன்னதானம் செய்து முன்னோர்களின் ஆசிகளை பெறுங்கள்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

மகாளய பட்சம் ஆரம்பம்:இன்று செவ்வாய்க் கிழமை  மகாளய பட்சம் துவங்குகிறது. வாழ்க்கையில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் வழிபாடுகளில் இந்த மகாளய பட்சம் வழிபாடுதான் முதன்மையானது. மிகவும் எளிதானது. ஆண்டுக்கு ஒரு முறைதான் நமக்கு இந்த வழிபாட்டுக்கான வாய்ப்பு கிடைக்கும். மகாளய பட்சம் வழிபாடு என்பது பித்ருக்களான மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டிய ஒன்றாகும்.

நம்மை பெற்றவர்கள், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் இதர முன்னோர்கள் மறைந்த பிறகு அவர்கள் தெய்வத்துக்கு சமமாக மாறி விடுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் அவர்களுக்கென்றே பித்ருலோகம் உள்ளது. மரணத்துக்கு பிறகு அங்கு சென்று விடும் நம் மூதாதையர்கள் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அங்கிருந்து கொண்டு நமக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள். பொதுவாக பெற்றோர் மறைந்த பிறகு பெரும்பாலானவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16-வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

பிறகு ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் இறந்த நாளில் அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள். அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அவர்களது புகைப்படத்திற்கு மாலை போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டு கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் சுரத்தில்லாமல் போய் விடுவதுண்டு. அதன் பிறகு அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு முறை வரும் கோவில் கொடை விழா மாதிரியாகி விடும்.

உயிரோடு இருந்த போது காணப்பட்ட பந்தம், பாசம் எல்லாம் காற்றில் கரைந்து காணாமலே போய் விடும். (சிலர் உயிரோடு இருக்கும் போதும் பெற்றோரை கவனிப்பதில்லை. அது வேறு விஷயம்) சிலர் ஏதோ உறவே அத்துப்போய் விட்டது போல நடந்து கொள்வார்கள். ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம் தினம் நமக்கு அருளாசி வழங்கி கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்ய தவறுவதே இல்லை.
உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கேற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள். உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான் அவர்களது குடும்பம் இந்த பூவுலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள்தான். நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்தளவிற்கு அவர்கள் காப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.

எவன் ஒருவன் தன் முன்னோருக்கு அமாவாசை தோறும் தர்ப்பணம் கொடுக்கிறானோ, அவனது குடும்பம் அமைதி பெற்று உயரிய நிலைக்கு சென்று கொண்டே இருக்கும். சாஸ்திர விதிப்படி ஒருவன் மறைந்த தன் மூதாதையர்களுக்கு ஆண்டுக்கு  96 நாட்கள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆனால் எல்லோராலும் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய முடிவதில்லை. என்றாலும் முன்னோர்கள் இறந்த திதி நாளை கணக்கிட்டு பெரும்பாலானவர்கள் திதி கொடுத்து விடுகிறார்கள். அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசையில் தவறாமல் தர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.

இப்படி எதுவுமே செய்யாமல் அதாவது திதி, தர்ப்பணம், சிரார்த்தம் என்று எதுவுமே செய்யாமல் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அத்தகையவர்களுக்காகவே மகாளய பட்சகாலம் உள்ளது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளயபட்ச நாட்களாகும். ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மற்ற மாத அமாவாசை நாட்களை விட இந்த மகாளய அமாவாசை மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும். இன்னும் சொல்லப் போனால் எந்த அமாவாசையும் புரட்டாசி அமாவாசைக்கு நிகரே கிடையாது. 

மகாளய பட்சத்தின் 15 நாட்களும் பித்ருக்கள் அனைவரும் வானுலகில் இருந்து நம் குடும்பத்தாரை தேடி பூமிக்கு வந்து விடுவார்கள். இந்த 15 நாட்களும் அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள். நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தர மாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடக் கூடாது. அவர்களை பார்க்க வைத்து விட்டு நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிட்டால் அது நியாயமல்ல. அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை. பெற்ற அம்மாவும், அப்பாவும் நாம் ஏதாவது தர மாட்டாமோ என்று காத்து கொண்டிருக்கும் போது அவர்களை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் மனம் என்ன பாடுபடும். அவர்கள் மீண்டும் வீட்டில் இருந்து 15 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு போகும் போது பசியும், பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள்.

நம் மகன், மகள் நம்மை கவனிக்கவே இல்லையே என்ற கோபத்தில் சாபம் கூட கொடுக்க வாய்ப்புள்ளது. இதுதான் பாவமாகவும், தோஷமாகவும் மாறி விடும். இத்தகைய நிலையை ஏற்பட விடக்கூடாது. அதற்கு நாம் மகாளய பட்சம் 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில் உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முக்கியமாக மகாளய பட்ச நாளில் அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும். இந்த தான, தர்மம் மூலம் மகிழ்ச்சியடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த வாழ்த்த உங்கள் வாழ்வில் மேன்மை உண்டாகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மகாளய பட்ச தினம் இன்று தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி மகாளய அமாவாசையுடன் நிறைவுக்கு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து