முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா:மு.க.ஸ்டாலின் - தினகரனுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்....தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. கடைசியாக கடந்த 22-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

30-ல் நிறைவு விழா......இந்த நிலையில் வரும் 30-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு அமைய பெற்று 50 ஆண்டு பொன்விழாவும் நடைபெறுகிறது.  இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மலரையும் வெளியிடுகிறார். மேலும் தமிழ்நாடு பொன்விழா ஆண்டையையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம் பணியாளர் மற்றும் நி்ர்வாக சீர்த்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். 

தினகரனுக்கு அழைப்பு.....இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி,.வி.தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் ராஜ்யசபா உறுப்பினர்கள் டாக்டர் மைத்ரேயன், டி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஜெயவர்தன், எஸ்.ஆர் .விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ் பாபு ஆகியோரும் எம்.எல்.ஏ.க்கள் விருகை வி.என்.ரவி ( அ.தி.மு.க.) சத்தியநாராயணன் ( அ.தி.மு.க.) ஆர்.நடராஜ் ( அ.தி.மு.க.) ஜெ. அன்பழகன் ( தி.மு.க.) ரங்கநாதன் ( தி.மு.க.) கே.எஸ்.ரவிச்சந்திரன் ( தி.மு.க.) பி.கே.சேகர்பாபு ( தி.மு.க.) எம்.கே.மோகன் ( தி.மு.க.) கு.க.செல்வம் ( தி.மு.க. ) மா.சுப்பிரமணியன் ( தி.மு.க.) வாகை சந்திரசேகர் ( தி.மு.க.) சிவகுமார் (எ) தாயகம் கவி ( தி.மு.க. ) மற்றும் பாடநூல் வாரிய மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி ஆகியோரும் வாழ்த்தி பேசுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு....முடிவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் இரா.வெங்கடேசன் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் நடைபெறவிருக்கிறது. எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் இல்லாத வகையில் சிலபேரை அழைக்க வேண்டியது கடமையாகும். இந்த விழா சென்னையில் நடைபெறுவதால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரன் மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரை அழைத்து இருக்கிறோம். அவர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று உளமாற விரும்புகிறோம். மற்ற இடங்களில் கலந்து கொண்டது போல இங்கும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து