முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேச துரோக வழக்கில் நவாசுக்கு லாகூர் நீதிமன்றம் சம்மன்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லாகூர்,மும்பை தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இது தொடர்பான தேசத் துரோக வழக்கில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா ஆவண முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்தார்.

இந்தச் சூழலில், பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் நாளிதழுக்கு கடந்த மே மாதம் நவாஸ் அளித்த பேட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்கள் எல்லை தாண்டிச் சென்று, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.மேலும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதன் மூலம், பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும், பாகிஸ்தான் அதிகார அமைப்புகளுக்கும் தொடர்பே இல்லை என்று அந்த நாட்டு தரப்பில் ஆணித்தரமாக கூறப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்தது அந்த நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.அதையடுத்து, அவருக்கும், டான் நாளிதழுக்கும் எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணையை நீதிபதி சையது மஸாஹர் அலி அக்பர் நக்வி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு மேற்கொண்டது.அப்போது, வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீஃப் ஏன் நேரில் ஆஜராகவில்லை? என்று அவரது வழக்குரைஞர்களிடம் கேள்வியெழுப்பியது.மேலும், வழக்கு விசாரணைக்காக நவாஸ் ஷெரீஃபை அடுத்த மாதம் 8-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு பஞ்சாப் காவல்துறையின் துணைத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து