முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பச் சண்டைதான் நடக்கிறது: தி.மு.க. கட்சியே அல்ல; அது ஒரு கம்பெனி - சேலம் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : தி.மு.க.வில் குடும்பச் சண்டைதான் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி என்று சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.

தமிழகம் முழுவதும்...

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க. - காங்கிரஸ் கட்சியினரின் போர்க்குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்தி  அவர்களை தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டனம் கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன் படி நேற்று தமிழகம் முழுவதும் கண்டன கூட்டங்கள் நடைபெற்றன. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள்.

சேலத்தில் நேற்று நடந்த கண்டன கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கருணாநிதியும் - ஸ்டாலினும்...

ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி  3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார். உண்ணாவிரதத்தின் முடிவில் மத்திய அரசு வாக்குறுதி தந்ததாக சொல்லி தனது உண்ணாவிரதத்தை முடித்தார். அவரது பேச்சை நம்பி இலங்கையில் பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த ஈழத் தமிழர்கள் வெளியே வந்தார்கள். அதை பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சே குண்டுமழை பொழிந்து நமது இன மக்களை கொன்று குவித்தார். அதற்கு துணை போனவர்கள் கருணாநிதியும்,

ஸ்டாலினும்.

போர்க்குற்றம் செய்தவர்...

இதையெல்லாம் இவ்வளவு காலம் தாழ்த்தி ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம்தான் இந்திய ராணுவம் அவர்களுக்கு உதவிய விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆகியோர்தான் போர்க்குற்றம் செய்தவர்கள். இந்த விஷயத்தை மத்திய அரசு மற்றும்  சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லத்தான் தமிழகம் முழுவதும் இந்த கண்டனக் கூட்டங்கள் நடக்கின்றன.

முகத்திரையை கிழிக்கவே...

தமிழினத்தை படுகொலை செய்தவர்கள் இந்த தி.மு.க.வினர். வெட்கமில்லாமல் இன்று நடமாடுகிறார்கள். அவர்களது முகத்திரையை கிழிக்கவே இந்த கூட்டம் இங்கு நடக்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கும்பல் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. அண்மையில் ஸ்டாலின் இங்கு வந்தார். அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்துவிட்டது போல பேசிவிட்டு சென்றார். ஒரு பொய்யை அடிக்கடி சொன்னால் உண்மையாகிவிடும் என்று அவர் நினைக்கிறார்.

மதிக்கக்கூடிய இயக்கம்

செயல்படாத தலைவராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வின் தலைவராகிவிட்டார். ஆனால் அங்கு குடும்பச் சண்டைதான் நடக்கிறது. தி.மு.க. ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. அங்கே வாரிசுகளுக்குத்தான் பதவி கிடைக்கும். திண்டுக்கல்லில் பெரியசாமிக்கு பிறகு அவரது பையன் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு அவரது மகன் முக்கிய பதவியில் இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் மிட்டா மிராசுகள் அல்ல, தொழில் அதிபர்களும் அல்ல, இங்கு யார் வேண்டுமானலும் பதவிக்கு வரலாம். உழைக்கக் கூடியவர்களை மதிக்கக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. நாங்கள் பதவிக்கு வந்ததில் உனக்கு ஏன் பொறாமை? உனக்கு பிராப்தம் இல்லை.

ஒழிக்கப் பார்கிறார்கள்...

எங்கள் தலைவி கஷ்டப்பட்டு கரடுமுரடான பாதையை கடந்து முதல்வர் பதவிக்கு வந்தார். அவரையும் விட்டு வைத்தீர்களா? லாரி மோதி கொல்லப்பார்த்தீர்கள். எம்.ஜி.ஆரையும் ஒழிக்கப் பார்த்தீர்கள். சட்டசபையில் அவரது மைக்கை பறித்தீர்கள். அப்போது சவால் விட்டு சென்றவர் முதல்வராக திரும்பி வந்தார். அம்மாவையும் சட்டசபையில் தாக்கினீர்கள். பெண் என்றும் கூட பாராமல் சேலையை பிடித்து இழுத்தீர்கள். ஆனால் பொறுமையை கடைபிடித்த அம்மா தமது சபதத்தின் அடிப்படையில் முதல்வராக சட்டசபையில் நுழைந்தார். ஆக எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவை ஒழிக்க நினைத்தவர்கள் இன்று நம்மையும் ஒழிக்கப் பார்கிறார்கள். எத்தனை நெருக்கடி தந்தாலும் அது நடக்காது.

நாம் இரும்பு மனம் படைத்தவர்கள். தைரியம் நமக்கு உண்டு. அச்சம் என்பது கிடையாது. உழைக்க வந்த கூட்டம் இது. பதவி வெறிபிடித்தவர்கள் அல்ல நாங்கள். ஸ்டாலின் எப்போதும் கனவு காண்கிறார். அவரால் கனவுதான் காண முடியும். ஒருநாளும் அவரால் முதல்வராக முடியாது. அடிக்கடி லண்டன் போய்விடுகிறார். அப்பாவின் தோளில் ஏறி பதவிக்கு வந்தவர். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. கிளை செயலாளராக, மாவட்ட செயலாளராக, மந்திரியாக இப்படி படிப்படியாக வந்தவர்கள் நாங்கள்.

குடும்ப ஆட்சி இல்லை

எங்களது விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு. இது உயிரோட்டமுள்ள இயக்கம். மக்கள்தான் எங்களுக்கு குடும்பம். உங்களைப் போல் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. முதலில் கருணாநிதி பிறகு ஸ்டாலின், இப்போது அவரது மகன் உதயநிதியும் வந்துவிட்டார். ஆட்சியை கவிழ்க்க துடித்தீர்கள் முடியவில்லை. இப்போது ஊழல் ஊழல் என்கிறீர்கள். நீங்கள் எதை சொன்னாலும் எடுபடாது. தமிழகம் முழுவதும் பல பாலங்களை கட்டிக் கொடுத்திருக்கிறோம். பல சாதனைகளை செய்திருக்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மதுரையில் கண்டன....

இதேபோல் தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் மாநகர மாவட்ட அ.தி.மு.க., புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினர். ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டன உரை ஆற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து