முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மதக் கலவரத்தை தடுத்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பரேலியின் சிங்கம் என பாராட்டு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பரேலியில் மதக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதற்காக தமிழகத்தை சேர்ந்த ஜி.முனிராஜ், ஐ.பி.எஸ். அதிகாரியை சிங்கம் எனக் கூறிப் பாராட்டுகள் குவிகின்றன.

உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் கடந்த வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது பித்ரி செயின்பூரின் முக்கிய பாதையில் செல்ல பா.ஜ.க எம்.எல்.ஏ.வான பப்பு பர்தோல் என்கிற ராஜேஷ் மிஸ்ரா எதிர்த்தார். இதில் தடுப்புகளை அகற்றச் சென்ற பரேலியின் நகர போலீஸ் எஸ்.பி., ஏ.எஸ்.பி. உள்ளிட்ட 20 போலீசார், பப்புவின் ஆட்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். அதேசமயம், அருகிலுள்ள பகுதியில் மசூதி எரிக்கப்பட்டதாக கிளம்பிய வதந்தியை நம்பி சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் திரண்டனர்.

இதனால், உருவான மதக்கலவரச் சூழலை, பரேலி மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளரான ஜி.முனிராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்து தடுத்தார்.

இது குறித்து  அவர் கூறும்போது, முஸ்லிம்களிடம் பேசி மொகரம் ஊர்வலத்தை வேறு பாதையில் பயணிக்கச் செய்தேன். எம்.எல்.ஏ.வான பப்பு, அவரது மகன் விக்கி பர்தோல், அவர்களது ஆதரவாளர்கள் என 15 பேர் மீதும், ஆயுதங்களுடன் திரண்ட முஸ்லிம்களில் 27 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ளேன். சுமார் 10 வருடங்களுக்கு பின் மொகரம் ஊர்வலம் மதக்கலவரம் இன்றி முடிந்துள்ளது எனத் தெரிவித்தார்.

மத கலவரத்தை அடக்கியதற்காக சிங்கம் இந்திப் படத்தின் நாயகன் அஜய் தேவ்கானுக்கு பதிலாக முனிராஜின் புகைப்படத்துடனான பதிவுகள் உ.பி.வாசிகளின் வாட்ஸ்-அப்களில் வைரலாகி வருகின்றன. அவரை சிங்கம் திரைப்பட நாயகன் போல் சித்தரித்து சில இந்தி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவரான முனிராஜ், கோவையில் கடந்த வருடம் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்த உபி. கொள்ளையர்களை இவர் கைது செய்து ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து