முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காணாமல்போகும் 10-பேரில் 6 குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை: ஆய்வில் தகவல்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : "நாட்டின் தலைநகர் டெல்லியில் காணாமல்போகும் 10 குழந்தைகளில் 6 குழந்தைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை' என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு (ஏபிஆர்), குழந்தைகளின் உரிமை (சிஆர்ஒய்) ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆய்வு நடத்தி  வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. "டெல்லியில் காணாமல்போன குழந்தைகள் -2018' என்ற தலைப்பிலான இந்த ஆய்வு அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லியில் 26,761 குழந்தைகள் காணாமல்போய் உள்ளனர். அதில், 9,727 குழந்தைகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்துள்ளது. டெல்லியில் காணாமல்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்து வருகிறது. அந்தக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பது குறைவாக உள்ளது. ஆகையால், இதில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் போலீஸ் துறை முழுவதும் முனைப்பு காட்டவில்லை. டெல்லியில் குழந்தைகள் காணாமல்போகும் சம்பவங்களை வைத்து முழுமையான ஆய்வு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2016ஆம் ஆண்டு தகவல்களை வைத்து பார்க்கும்போது, தேசிய தலைநகர் டெல்லி, குழந்தைகளுக்கு பாதுகாப்பாற்ற 7 நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. இதில் இருந்து மீள போலீஸ் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். காணாமல்போன குழந்தைகள் குறித்து பொது இடங்களில் அறிவிப்புப் பலகைகளை வைத்து அறிவிக்க வேண்டும். குழந்தைகள் காணாமல்போகும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

டெல்லி காவல் துறையில் போதிய காவலர்கள் இல்லாததால் காணால்போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதில் தோய்வு ஏற்படுகிறது. காவலர்களுக்கு பல்வேறு பணிகளுடன் சேர்த்து குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியும் வழங்கப்படுவதாலும், பணிச்சுமையின் காரணத்தாலும் இந்த வழக்குகளில் போலீஸாரால் கவனம் செலுத்த முடிவதில்லை.

காணாமல் போகும் குழந்தைகளில் 12-18 வயதுடையவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் சிறுமிகள்தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களாகவும், பாலியல் தொழில்களிலும், கட்டாய திருமணத்திலும், வீட்டு பணிகளிலும், பிச்சை எடுப்பதிலும் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து