முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன், வங்கிகணக்கு, மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமில்லை: அரசியல் சாசனப்படி ' ஆதார் ' செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - ' பான் கார்டு, வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய ஆதார் அவசியம்'

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே சமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்கு ஏற்ற வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எதிர்த்து மனு தாக்கல்

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

5 நீதிபதிகள் அமர்வு...

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கிய போது, கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இடைக் கால தடை...

வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர்.

57-வது பிரிவு ரத்து

இந்த நிலையில் நீதிபதிகள் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில் அவர்கள் கூறியதாவது:-

அரசியல் சாசனப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது. அதே சமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அது போலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக் கூடாது. அதே சமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து