சிவகங்கை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நேற்று வியாழக்கிழமை தொடங்கி (செப்.27 ) அக்டோபர் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து புத்தகத் திருவிழாவை நடத்தும் தேவகோட்டை புத்தகத் திருவிழா அறநிலை அமைப்பினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் அங்குள்ள நகரத்தார் தொடக்கப் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். திருவிழா வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் தலைவர் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் நகரத்தார் மேல்நிலைப் பள்ளி செயலர் அ.ராமநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். தொழிலதிபர் நல்லிகுப்புசாமி செட்டியார் சிறப்புரையாற்றுகிறார்.
சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் விழாப் பேரூரையாற்றுகிறார். இதில் தேவகோட்டை பதிப்பாளர் சங்கத்தின் செயலர் ராம.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். புத்தகத் திருவிழா தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் (திருப்பத்தூர் சாலை) தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவுக்காக சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 60 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளில் 50 தமிழ் பதிப்பாளர்கள், 10 ஆங்கிலப் பதிப்பாளர்கள், ஊடகம், குறுந்தகடுகள் விநியோக அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேலான தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூல்கள் அரங்குகளில் இடம் பெறுகின்றன. அனைத்து புத்தகங்களுக்கும் பத்து சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் நீதிபதிகள், பேச்சாளர்கள், கவிஞர்கள், ஆன்மிகத் தலைவர்கள் பங்கேற்பதுடன், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. விழாவில் மூத்த பதிப்பாளர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அரு.லெட்சுமணன் பங்கேற்று மூத்த பதிப்பாளர் பாராட்டு நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்கிறார். இதில் பேராசிரியர் த.ராஜாராம் பாராட்டிப் பேசுகிறார்.
போட்டிகள்: புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. புத்தகத் திருவிழா வளாகத்தில் ஏ.டி.எம்.வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசமாகும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை உமா பதிப்பகம் ராம.லட்சுமணன், குமரன் பதிப்பகம் எஸ்.வயிரவன் மற்றும் விழா ஊடக ஒருங்கிணைப்பாளர் ராம.மெய்யப்பன் ஆகியோர் செய்துள்ளனர்.