காந்தி பிறந்தநாளையொட்டி கதர் தள்ளுபடி விற்பனை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
2 rmd news

ராமநாதபுரம், - காந்தி பிறந்தநாளையொட்டி ராமநாதபுரத்தில் தீபாவளி கதர் தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தொடங்கி வைத்தார்.
 காந்தியடிகள் அவர்களின் 150ஆவது பிறந்த  தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்;மனை அருகேயுள்ள கதர் கிராமத் தொழில் விற்பனை நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி  அண்ணல் காந்தியடிகள் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  அதன் பின்பு கதர் விற்பனை நிலையத்தின் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்து, கதர் ரகங்களைப் பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், கிராமப்புற கைவினைஞர்களைக் கொண்டு நூற்பு மற்றும் நெசவுத் தொழிலை முழுநேரம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது.  பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும், மத்திய மற்றும் மாநில அரசுகள் கதர் ரகங்களுக்கு 30சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கிட அனுமதி வழங்கியுள்ளது. 
    மேலும் அரசுப் பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் கதர் இரகங்கள் கடன் முறையில் வாங்கிப் பயன் பெறும் வகையில் அரசால் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
 மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கதர் விற்பனை நிலையங்கள், ஒரு கிராமிய நூற்பு நிலையம், ஒரு கதர் உபகிளை ஆகியவற்றில் கதர் விற்பனை, கதர் நூல் உற்பத்தி, கதர் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது.  இவ்வலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கதர் அங்காடிகளுக்கு 2017-ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ரூபாய் 25 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு ரூபாய் 29 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் கதர் இரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  தற்போது 2018-ஆம்ஆண்டிற்கு ரூபாய் 40 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள தள்ளுபடி சலுகைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கதர், பட்டு, பாலிஸ்டர், உல்லன் இரகங்கள் மற்றும் ரெடிமேட் சட்டைகள், மெத்தைகள், தலையனைகள் ஆகியவற்றை வாங்கி பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு கூறினார். இவ்விழாவில்; செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மேலாளர்கள் சரவணப்பாண்டியன், எம்.ராமரத்தினம்,   கதிஜாபீவி, சுப்பிரமணியன், தனி அலுவலர் ஆர்.முத்துக்குமார்  உட்பட  அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து