முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

150-வது பிறந்த நாளையொட்டி காந்தி சிலைக்கு கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சர்வோதயா சங்கத்தினர் நடத்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர். காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழக அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருஉருவ சிலைக்கு அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவ படத்திற்கு நேற்று காலை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சர்வோதயா சங்கத்தினர் நடத்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளும் அவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகள், பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்த நடைபெற்ற சைக்கிள் பேரணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். இப்பேரணி காந்தியடிகள் சிலையில் இருந்து புறப்பட்டு கிண்டி காந்தி மண்டபம் வரை நடைபெற்றது.

நேற்று மாலை 5 மணிக்கு கிண்டி, காந்திமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இவ்விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை விகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. காந்தியடிகளின் 150-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 4-ம் தேதி வரை காந்தி மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காந்தியடிகள் பற்றிய திரைப்படம் திரையிடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து