முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த மருத்துவ சேவை - தூய்மை பராமரிப்புக்கு தேர்வான 17 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் விருது - கேடயங்கள் - முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சிறந்த மருத்துவ சேவை மற்றும் தூய்மை பராமரிப்புக்காக தேர்வான 17 தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட விருது மற்றும் கேடயங்களை நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடபாடி பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார்.

முதல்வரிடம் வாழ்த்து

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ் சிறந்த மருத்துவ சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 13 அரசு மருத்துவ நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட தர சான்றிதழ்கள் மற்றும் 2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666 ரூபாய்க்கான காசோலைகளையும், அரசு மருத்துவமனைகளில் சிறந்த தூய்மை பராமரிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 4 அரசு மருத்துவ நிலையங்களுக்கு மத்திய சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட காயகல்ப் விருதிற்கான கேடயம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ஒரு  கோடி ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட இணை இயக்குநர்கள் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) மற்றும் துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

மத்திய அரசு...

தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவ நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், தரமான சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு, மருத்துவமனை வழங்கும் சேவைகள் குறித்து நோயாளிகளின் கருத்துக்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு தலா 10,000 ரூபாய் வீதமும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 3,00,000 ரூபாய் வீதமும் பரிசுத் தொகையும், தர சான்றிதழும் மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.

3 ஆண்டுகளுக்கு...

இப்பரிசுத் தொகை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். தேசிய ஆய்வுக் குழுவால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 17 பிரிவுகளும், மாவட்ட துணை மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 பிரிவுகளும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 பிரிவுகளும் ஆய்வு செய்யப்படுகிறது.

17 மருத்துவமனைகள்...

2017–18ம் ஆண்டில், மத்திய அரசால் அனுப்பப்பட்ட மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஆய்வுக் குழு, தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளையும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2018-ல் மூன்று நாட்கள் ஆய்வு செய்து, மதுரை மாவட்டம் – உசிலம்பட்டி, தருமபுரி மாவட்டம் – பென்னாகரம், கன்னியாகுமரி மாவட்டம் – பத்மநாபபுரம், ஈரோடு மாவட்டம் – ஈரோடு, கடலூர் மாவட்டம் – கடலூர், நாமக்கல் மாவட்டம் – நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டம் – உதகமண்டலம் ஆகிய 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தருமபுரி மாவட்டம் – பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தருமபுரி மாவட்டம் – மொரப்பூர், ராமநாதபுரம் மாவட்டம் – சாயல்குடி, கடலூர் மாவட்டம் – வடலூர், விழுப்புரம் மாவட்டம் – முகையூர், சேலம் மாவட்டம் – மேச்சேரி ஆகிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்ந்தெடுத்து, தேசிய தர சான்றிதழ்களுடன் 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 666 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தூய்மை பராமரிப்பு

மருத்துவமனை தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், நோய்த் தொற்று தடுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைகளை மாநில அளவில் ஆண்டுதோறும் மூன்று கட்டமாக ஆய்வு செய்து முதல் இரண்டு இடங்களை பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் காயகல்ப் விருதும், முறையே 50 லட்சம் ரூபாயும், 20 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று, வட்ட மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதல் பரிசாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

சுகாதாரத் துறையால்...

அதன் படி, மருத்துவமனை தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், நோய்த் தொற்று தடுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதல் பரிசையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம்– மணப்பாறை, அரசு தலைமை மருத்துவமனை இரண்டாம் பரிசையும்; சிறந்து விளங்கிய வட்ட மருத்துவமனையில், விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையும், சிறந்து விளங்கிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், விழுப்புரம் மாவட்டம் – முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் முதல் பரிசிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய சுகாதாரத் துறையால் காயகல்ப் விருதுகளும், பரிசுத் தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குநர் டாக்டர் டேரஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பி. உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் கு. குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நா. ருக்மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து