முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இந்தியா - மே.இ.தீவுகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ராஜ்கோட் : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

மூன்று வகை போட்டியில்...

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து பயணத்தில் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறது.

10-வது டெஸ்ட்...

இந்திய அணி 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றி சாதனை படைத்தது. 2012-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன் பிறகு சொந்த மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி முத்திரை பதித்து இருந்தது. தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் வென்று சொந்த மண்ணில் 10-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. வெஸ்ட் இன்டீசை 2016-ல் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

மீண்டும் திரும்பி...

ஆசிய கோப்பை போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்பதே அனைவரது எதிபார்ப்பாக இருக்கிறது. வழக்கமாக விளையாடும் தவான், முரளி விஜய் அணியில் இருந்து கழற்றவிட்டப்பட்டு உள்ளனர்.

பிரித்வி - அகர்வால்

இதனால் லோகேஷ் ராகுலுடன் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது. பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக ஆடுவார்கள். பேட்டிங்கில் கேப்டன் கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதே போல ரிஷப் பந்தும் அணிக்கு வலுசேர்ப்பார். மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அஸ்வின்- ஜடேஜா

சுழற்பந்தில் அஸ்வின்- ஜடேஜா கூட்டணி சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள். வேகப்பந்தில் புதுமுக வீரர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இடம் பெற்றால் உமேஷ் யாதவ், முகமது‌ ஷமி ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம். டெஸ்டில் நம்பர் 1 அணியாக திகழும் இந்தியா அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இந்த டெஸ்ட் தொடரை சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.

புதுமுக வீரர்கள்...

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இலங்கையுடன் ‘டிரா’ செய்தது. அதை தொடர்ந்து வங்காளதேசத்தை 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொள்ளும். வேகப்பந்து வீரர் கேமாரோச் சொந்த காரணத்துக்காக நாடு திரும்பி உள்ளார். அவர் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே. புதுமுக வீரர்களை கொண்ட வெஸ்ட் இன்டீஸ் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க கடுமையாக போராட வேண்டும்.

இன்றை டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து