முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 படுக்கைகள் வசதி கொண்ட அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவினை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக நேற்று (4–ந் தேதி) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 4 படுக்கைகள் வசதி கொண்ட அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்து, சிறந்த செவிலியர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது :- அம்மாவின் அரசில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது. அம்மாவால் துவக்கி வைக்கப்பட்ட அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சைகளும் ஒரு இடத்தில் அமைந்துள்ளன. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்று அணுகூறு புற்றுநோய் உயர் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தைராய்டு, நியூரோஎண்டோகிரைன், புரோஸ்டேட், நரம்பு மூல செல் மற்றும் பியோ குரோமோ சைட்டோமோ போன்ற புற்றுநோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான கதிரியக்க தன்மை கொண்ட மருந்துகளை உடலில் செலுத்தி புற்றுநோயை குணப்படுத்த முடியும். இதற்கான வசதிகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

4 படுக்கை வசதி...இந்திய அணு சக்தி கட்டுப்பாடு ஆணையம் மற்ற மாநில அரசு மருத்துவமனைகளில் ஒன்று அல்லது இரண்டு படுக்கை வசதி கொண்ட பிரிவு அமைப்பதற்கே அனுமதி அளித்துள்ளது. ஆனால் இம்மருத்துவமனையில் மட்டுமே 4 படுக்கை வசதி கொண்ட பிரிவு அமைப்பதற்கு முதன் முறையாக அனுமதி அளித்துள்ளது.மும்பையில் உள்ள இந்திய அணு சக்தி கட்டுப்பாடு ஆணைய அனுமதியுடன் சர்வதேச தரத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் இந்த அணுகூறு உயர் சிகிச்சை பிரிவின் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களால் சுற்றுப்புற பாதிப்படையாமல் இருக்க அனைத்து சிறப்பு அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கு நோயளிகளின் வசதிக்காக இயற்கையான வெளிச்சம், தொலைக்காட்சி, உறவினர்கள் நேரடியாக தொடர்புகொள்ளும் வசதிகள், சிசிடிவி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு வடிவமைக்கப்பட்ட உடை மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவும் வழங்கப்படும்.

ரூ.6 லட்சம் கருவி...இந்த பிரிவில் தைராய்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க தன்மை கொண்ட மருந்தினை நோயாளி உட்கொண்டு நோயாளி நடமாடும் கதிரியக்க மூலமாக மாறுவார். பின்னர் 1 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இங்கு அனுமதிக்கப்படுவார். 1 மீட்டர் தூரத்தில் நோயாளியிடமிருந்து 55mR/hr என்ற கதிரியக்க வெளியிடுதல் அளவிற்கு குறைவாக இருந்தால் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார். 6 மாதத்திற்கு ஒரு முறை நோயாளி புறநோயாளி பிரிவில் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இப்பிரிவில் ரூ.6 லட்சம் மதிப்பில் நோயாளிக்கு தேவைப்படும் கதிரியக்க மருந்தின் அளவை கணக்கிடும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.19 கோடி ஒப்பந்தம்...மேலும், சென்னை விமான நிலைய ஆணையம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக 27.3.2018 அன்று அதிநவீன மருத்துவ கருவிகள் (நேரியல் முடுக்கி, பிரேக்கிதெரபி, சி.டி. ஸ்கேன் சிமுலேட்டர்) ரூ.18.50 கோடி மதிப்பில் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், புற்றுநோய் கதிர்வீச்சு துறைத் தலைவர் பாலசுப்பிரமணியம், அணுக்கூறு மருந்தியல் துறை தலைவர் பிரபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து