முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை,மதுரை ராசியான மாவட்டம், இங்கு தொட்டது துலங்கும் என்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு தமிழக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரைக்கும் அம்மா இருக்கின்ற போதே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, அவரது வேண்டுகோளை ஏற்று, மத்தியில் ஆளுகின்ற பாரதீய ஜனதா, பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் மதுரையிலே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தந்திருக்கின்றார். விரைவிலே பாரதப் பிரதமரை சந்திப்பேன். அவரிடத்திலே கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வேன். நிச்சயமாக மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும். இதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-

கேள்வி:  தமிழகத்தில் 7-ஆம் தேதியிலிருந்து பருவ மழை பொழியும் என்று வானிலை மையம் சொல்லியிருக்கிறது. அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

பதில்: பருவ மழை முன்னெச்சரிக்கையைப் பொறுத்தவரைக்கும், கிட்டத்தட்ட 3 முறை அரசினுடைய உயர் அதிகாரிகளை அழைத்து தலைமைச் செயலகத்திலே அவர்களுடைய ஆலோசனைகளை பெற்று அதற்குத்தகுந்த ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. வெள்ளத்தடுப்பு எச்சரிக்கையை, எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதில் அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்குத் தேவையான நடவடிக்கையை  எடுத்து வருகிறது. தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, தேர்தலே அறிவிக்காத நிலையில் கூட்டணி பற்றி எப்படி பேச முடியும். இப்பொழுது இருக்கின்ற பிரச்சினை, நாங்கள் தனியாக இருக்கின்றோம். யாருடனும் கூட்டணி கிடையாது. அந்த அடிப்படையில் நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.

கேள்வி: கருணாஸ் சபாநாயகரை மாற்ற கோரி கடிதம் அளித்துள்ளது பற்றி..

பதில்: இங்கிருக்கிற பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும், ஆளும்கட்சியில், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒரு சபாநாயகரை, அதாவது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலே என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் சட்டம் என்ன சொல்கிறது என்று, எங்களைவிட அதிகமாக ஊடக, பத்திரிகை நண்பர்களுக்குத் தெரியும்.

கேள்வி: ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது பற்றி...

பதில்: ஆர்.கே.நகர் தேர்தலில் எப்படி மக்களை ஏமாற்றி தினகரன் வெற்றி பெற்றார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் சொன்னார். திருப்பரங்குன்றத்து மக்கள் நல்ல விவேகமான மக்கள், நன்றாக சிந்தித்து செயலாற்றக் கூடியவர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்க்கதரிசனமாக முடிவு செய்யக் கூடியவர்கள். ஏற்கனவே,  எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் சரி, அம்மா இருந்த காலத்திலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வென்ற தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி. ஆகவே, வாக்காளப் பெருமக்கள் கழகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். இருபெரும் தலைவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள், அந்த இயக்கத்திற்குத்தான் வாக்களிப்பார்கள். அம்மாவினுடைய அரசு தொடர்ந்து இருபெரும் தலைவர்களினுடைய பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். மதுரை மாவட்டம் ஒரு ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் சரி, அம்மா  இருந்த காலத்திலும் சரி, இங்கே தொட்டது துலங்கும். இங்கே எது ஆரம்பித்தாலும் அது வெற்றியோடு முடியும். அந்த அடிப்படையில் முதன்முதலாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் கழகப் பணியை நாங்கள் துவக்கியிருக்கின்றோம்.

ஏற்கனவே பலமுறை ஊடகங்களில் சொல்லி விட்டோம். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அம்மா இருந்த காலத்திலே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார். திராவிட முன்னேற்றக் கழகம்தான் நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு முடிந்தவுடன் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும்.

நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். 93 சதவீதம் வெற்றியை ஈட்டி, வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கின்றோம். எந்தத் தேர்தல் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது. இருபெரும் தலைவர்களின் ஆசியோடு, இருபெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான் தேசிய அளவிலே பல்வேறு துறைகள் விருது பெற்றிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து