முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன இந்தியாவின் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு உரிய அளவில் இடம் பெறவில்லை - துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவீன இந்திய வரலாற்றிலும், தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு உரிய அளவில் இடம் பெறவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வரலாற்று பேரவையின் வெள்ளி விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார், அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஓரு திரைப்படப் பாடலில், ஒரு சம்பவம் என்பது நேற்று அது சரித்திரம் என்பது இன்று அது சாதனையாவது நாளைவரும் சோதனைதான் இடைவேளை என்று பாடினார். அந்தப் பாடலில் வரும் சம்பவங்களும், சோதனைகளை சென்ற சாதனைகளும், அந்தச் சாதனைகளால் விளையும் சரித்திரமும்தான் வரலாறு ஆகிறது. தமிழ்நாட்டை மறைத்துவிட்டோ அல்லது ஒதுக்கிவிட்டோ எழுதப்படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ் - திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக் குடும்பம், சைவ, வைணவ மரபுகள், கோயில் - சிலை வழிபாடுகள், திராவிடக் கலைகளான தென்னிந்திய கட்டிடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வைதீகம் உள்ளிட்ட பல்வேறு மரபுகளில் மிகுந்த தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

எனவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு இந்திய பண்பாடு, நம்பிக்கை மரபுகளை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. தமிழர்கள், கடல் கடந்து சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். யவனர்களின் அத்துமீறல்களை எதிர்த்து வென்றவர்கள் சேரர்கள். இலங்கைக்கும், தமிழ் அரசுகளுக்கும் இடையிலான அரசியல், ராணுவ, வணிக பண்பாட்டு உறவுகள், இந்திய தேசிய வரலாற்றில் தமிழ்நாட்டிற்கான தன்னிகரற்ற பங்கினை நிரூபிப்பதாக உள்ளன. சங்க காலச் சோழ மன்னன் கரிகால் வளவனுக்கு முன்னரேயே இத்தகைய உறவுகள் இருந்து வரலாற்று தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதை கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து, பேரரசை உருவாக்கிய ஒரே அரச வம்சம் தஞ்சையைச் சார்ந்த சோழர் வம்சமே ஆகும். அதுமட்டுமல்ல,தென்கிழக்கு ஆசிய நாடுகளில்பண்பாடு, கலைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களும் நமது தமிழர்களே ஆவர். அந்தக் காலம் முதல், இன்றைய தினம் வரை, அனைத்து மக்களையும், அனைத்து மதத்தினரையும், அன்புடன் நடத்தி, சமூக நல்லிணக்கத்துடன், பிறருக்கு முன்மாதிரியாக, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயரிய பண்பினைக் கொண்டவர்கள் தமிழர்கள். அதுதான் தமிழ் மண்ணின் மாண்பு. அதன் காரணத்தினாலேதான் தமிழகம், அப்போதும், இப்போதும், அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அத்தகைய காரணங்களால்தான், தமிழ் மண்ணில் சமணமும், பௌத்தமும், சைவமும், வைணமும், இஸ்லாமும், கிறித்துவமும் செழித்து வளர்ந்தன. ஆனால், இந்திய தேசத்தின் வரலாறு வரையப்படும்போது, இதனைக் கருத்தில் கொள்ளாமல், கங்கை கரையை மையமாக வைத்து வரையப்பட்டது.

அதனால்தான் தென்னிந்தியா - தமிழகம் போன்றவற்றின் பண்பாடுகள் புறக்கணிக்கப்படக்கூடிய துணை மரபுகளாக இருந்தன. கங்கை கரை நாகரிகங்களின், பேரரசுகளின், பண்பாடுகளின், விரிவாக்கம் மட்டுமே இந்திய வரலாறு என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தவறான அணுகுமுறை என்பதால்தான், வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாளர்கள் இந்திய வரலாறு காவிரிக் கரையிலிருந்து துவங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தான், தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை போன்ற தமிழ் வரலாற்று ஆய்வு அமைப்புகள், தமிழக பண்பாடு குறித்து மறைக்கப்பட்ட தகவல்களை, அறிவியல் முறையில் உறுதி செய்து, தமிழகத்திற்கும் தென்னகத்திற்கும், இந்திய தேசிய வரலாற்றில் உரிய இடம் கிடைக்கச் செய்ய முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. இந்த சிறப்பான செயல்களைப் பெரிதும் பாராட்டி, உங்கள் பணி வெற்றியுடன் தொடர்ந்திட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நவீன இந்திய வரலாற்றிலும், தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு அதற்கு உரிய அளவில் இடம் பெறவில்லை என்பதுதான் அது. இது வேதனைக்குரிய ஒன்றாகும். நவீன இந்தியாவில், சமூக மாற்றங்களை முன்வைத்து அரசியல் இயக்கம் நடத்திய ஒரே மாநிலம், அன்றைய சென்னை இராஜதானி, அதாவது இன்றைய தமிழகம். தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு சமூக சேவர்கள் ஆற்றிய பணி இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்திய தேசிய வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சமூக மாற்றத்தை மையமாகக் கொண்ட அரசியல் 1852 ஆம் ஆண்டு ஆரம்பித்துவிட்டது. 1887 ஆம் ஆண்டில் சென்னையில்தான் இந்திய தேசிய சமூக காங்கிரஸ் என்ற சமூக சிந்தனையாளர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவை குறித்தும், இந்திய விடுதலைக்காகவும் கனல் தெறிக்கும் கவிதைகளை நாட்டுக்குஅர்ப்பணித்த மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு தேசிய வரலாற்றில் உரிய அளவில் இடமில்லை என்பது வருந்தத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில் மகளிருக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே, சென்னை ராஜதானியில் மகளிருக்கு வாக்குரிமை கிடைக்கச் செய்த கட்சி, நீதிக் கட்சி! அதற்கும் தேசிய வரலாற்றில் உரிய இடம் அளிக்கப்படவில்லை. மக்கள் செல்வாக்கு படைத்த திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய அண்ணா, எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இந்த நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவாகும். தமிழர்களுக்கு, தமிழ் மண்ணிற்கு, இந்திய தேசத்திற்கு, ஆற்றிய அந்த பங்கினை தேசிய வரலாற்று புத்தகங்கள் குறிப்பிடுவதில்லை. இந்த வரலாற்றை இந்திய மக்கள் அனைவரும் அறியும் வகையில் இந்திய தேசிய வரலாறு படைக்கப்பட வேண்டும். திராவிடர் தலைவர்களின் தொண்டுகளையும், அம்பேத்கரின் பங்களிப்பினையும் எவ்வகையிலும் குறைத்திடாது, இந்திய தேசிய வரலாற்றில் இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்களின் பண்பாடுகள் இந்திய வரலாற்றில் உரிய இடத்தினைப் பெறவும், உங்களது ஆய்வுப் பணிகள் மேலும் செம்மையாக நடைபெறவும் அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து