முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை தொடர்பான முன்எச்சரிக்கை குறித்த ஆலோசணை கூட்டம்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமநாதபுரம்,- வடகிழக்குபருவமழை தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசணை கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.
      ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதனடிப்படையில், மாவட்டத்தில் மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்ககைகளை மேற்கொள்ள 15 மண்டல அளவில் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 15 குழுக்களும், இதர துறை அலுவலர்கள் கொண்ட குழுக்களாக 135 குழுக்களும், 429 ஊராட்சிகளில் 5,558 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு  முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 மாவட்டத்திலுள்ள 9 வருவாய் வட்டங்களிலும் வடகிழக்கு பருமழை பணிகளை கண்காணிக்க 9 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் பாதிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படக்கூடிய கண்டறியப்பட்ட பகுதிகளில் 174 ஜே.சி.பி, 63 ஜெனரேட்டர்கள் மற்றும் 463 பம்பு செட்கள் மற்றும் 44,000 மணல் மூட்டைகள் ஏனைய இதர உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான உணவுப்பொருட்கள் சேமித்து வைக்க  53 இடங்கள் தேர்வு செய்யப்ட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக 80 படகுகள் மற்றும் 316 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
 தொற்று நோய் கண்காணிப்பு பணியில் தேவையான மருத்துவக்குழுவினர் மண்டல அளவில் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தேவையான மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்படும் என கருதப்படும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோருக்குத் தனிக்கவனம் எடுத்து தேவைப்படின் அவர்களை இடமாற்றம் செய்வதற்கும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல கால்நடைகளுக்கு தேவையான தீவணம், மருந்துப்பொருட்கள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு ஐந்து வட்டாரங்களில் கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் நிவாரண மையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  மேலும் மாவட்டத்தில் மண்டல அளவில் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும், 8 வருவாய் வட்டங்களில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு துணை ஆட்சியர் நிலை அலுவலர் தலைமையிலும் பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பேரிடரினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்ட 39 இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு அந்த பகுதிகளில் மொத்தம் 15 சிறப்பு மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுதவிர தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மூலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2018 முதல் இதுவரை மொத்தம் 100 பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் ஒத்திகைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மீட்பு நடவடிக்கைகளுக்காக 62 இயந்திர படகுகள் ,  52 வெள்ள மீட்பு ஒளிர் விளக்குகள் உள்பட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 16 மழையளவு கணக்கீட்டு நிலையங்களின் மூலம் தினந்தோறும் மழையளவு கணக்கீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  அதேவேளையில் மாவட்டத்தில் உள்ள கண்மாய், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரளவு கண்காணிக்கப்பட்டு வருவதோடு அந்தந்த பகுதிகளில் கரை உடைப்பு ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரிசெய்திட ஏதுவாக போதிய அளவு மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
 வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு பேரிடர் காலத்தில் மேற்கோள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக, மழைக்காலத்தில் குடிநீரை காய்ச்சி பருகிட அறிவுறுத்திட வேண்டும். அதேபோல, பொதுமக்கள் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04567-230060 மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலாக்க பிரிவு எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு பேசினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.கண்ணன் உட்பட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து