முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 மாவட்டங்களைச் சேர்ந்த 322 பதின்மப் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர், - 8 மாவட்டங்களைச் சேர்ந்த 322 பதின்மப் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டம், எ.எ.எ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற விழாவில், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 322 பதின்மப் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்கினர்.
இவ்விழாவில் அமைச்சர்  செங்கோட்டையன் பேசியதாவது,
அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்குவதற்கும், அவர்களுக்கு சிறப்பான கல்வியை கற்று தந்து வேலைவாய்ப்பினை உருவாக்கி தரவும் கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6-முதல் 8-ஆம்  வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நான்கு செட் வண்ணச் சீருடைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு நேரத்தில் எல்லா மாணவர்களும் அந்தந்த பகுதிகளில் தேர்வு எழுத வேண்டும் என்ற நோக்கிலும், மாணவர்களின் மனஅழுத்தத்தை நீக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இன்னும் கூடுதலாக தேர்வு மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், சிறப்பாசிரியர்களுக்கு பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். மேலும், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜியாக தரம் உயர்த்தப்படும். மாணவர்கள் சிறந்த கல்வியை பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்து தர அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பேசும் போது,
அம்மா செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற கொள்கையோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் கல்வி நலனில் சீரிய அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணையினை பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாக வழங்கி வருகிறது. தற்போது சுமார் 2000 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 322 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு 2018-2019 ஆம் கல்வி ஆண்டிற்கு 31.05.2019 வரை உள்ள காலங்களுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்றத்தை உருவாக்கிட கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
இவ்விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் (சென்னை), மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன்  உள்ளிட்ட கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் மற்றும் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பதின்ம பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து