முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை தமிழகத்தில் 'ரெட் அலர்ட்' : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டார்.

அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், வரும் 7-ம் தேதி அன்று சில இடங்களில் மிக அதீத கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும், கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்குப் பலத்த மற்றும் மிகப் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் தொடர்பாக தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆய்வு கூட்டத்தில் எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச்  செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், இந்தப் பணிகளை எவ்வாறு முனைப்புடன்  செய்வது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மழை அதிகம்  பாதிக்கும் பகுதிகள் என்று ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் தேவையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களுக்குத் தேவையாக மருத்துவ வசதிகள், நிவாரண முகாம்களை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழக அரசு தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் மழை வந்தால் எப்படி அதனை எதிர்கொள்வது என்று இதுவரை மூன்று ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக வருவாய்த்துறை மழையால் அதிகம் பாதிப்படையும் என்று கருதப்படும் மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமித்துள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து