முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடக்கவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான தி.மு.க. புகாரில் ஆதாரம் ஏதும் இல்லை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்த பணிகள் ஒதுக்கியது குறித்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் ஆதாரம் ஏதுமில்லை என்று ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒப்பந்தங்கள் சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது நியாயமான விலைப் புள்ளிகளுடன் தான் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மனுதாரர் கூறுவது போல்  ஒரு கி.மீ. தூரமுடைய சாலையை ரூ. 2.20 கோடிக்கு போட முடியும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் இது இடத்திற்கு இடம் மாறுபடும். சில இடங்களில் மத்திய அரசின் கீழ் போடப்பட்ட சாலைகளுக்கு ரூ. 30 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து