முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

வீடுகளிலும், கோவில்களிலும் நவராத்திரி பூஜை இன்று 10-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. வீடுகளில் கொலு வைக்க தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும், பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும். மண் பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்க விடுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நவதானியங்களின் செழிப்பைத் தமது குடும்ப வளத்தின் நன்மை  தீமைகளை அறியும் சகுனமாக கொள்வர். வீடுகளில் கொலு வைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில்  அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 அல்லது 9 என்ற ஒற்றைப்படையாக படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து  சுவாமி படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேத்தியம்  செய்து பூஜிப்பது வழக்கத்தில் உள்ளது.

சுமங்கலி பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களை பராசக்தியாக பாவித்து கொலுவின் அருகில்  அமர செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர். ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக் கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும். நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும். நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரீவ பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும் நவராத்திரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும். பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சத்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன. பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி. ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி. புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும். வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள். நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி உற்சவ விழா தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

தமிழகத்தில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நவராத்திரி தினத்தில் அன்னையை சரணடைந்து அவளது அருளை பெறுவோம்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து