முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேட்டரி பேருந்துகள்: ரூ 155.17 கோடி மதிப்பில் 471 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 155 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 471 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பல திட்டங்கள்...

அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,744 பேருந்துகளை, நாள்தோறும் 87.22 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி வருகிறது. சுமார் ஒரு கோடியே 80 லட்சம் பயணிகள், தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மேலும், புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டிடங்கள், கோட்டங்கள் கட்டுதல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

80 மின்சார பேருந்து...

அத்துடன், போக்குவரத்துத் துறையின் வரலாற்றில் முதன் முறையாக சென்னை போன்ற பெருநகரங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், இங்கிலாந்து நாட்டின் சர்வதேச அமைப்பான சி.40 என்கிற முகமையின் ஒத்துழைப்புடன் சென்னையில் 80 மின்சார பேருந்துகளும், கோவையில் 20 மின்சார பேருந்துகளும் விரைவில் இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட வாரியாக பேருந்துகள்

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை) 60 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 77 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 43 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 111 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 46 பேருந்துகளும், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒரு பேருந்தும் என 155 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 471 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி. பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கழிவறை வசதியுடன் ....

இப்புதிய பேருந்துகளில், சென்னை - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கான 60 பேருந்துகளில், 38 சொகுசு பேருந்துகள், 8 கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், 10 குளிர்சாதன வசதி படுக்கையுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், 4 இருக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட நவீன சொகுசு பேருந்துகள் ஆகிய பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று இயக்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிருவாக இயக்குநர் பாஸ்கரன், அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து