ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்

புதுடெல்லி : தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விரிவான ஆலோசனை
தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்திசார் ஊக்கத் தொகை (போனஸ்) வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக போனஸாக 78 நாள் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்ற போனஸ் தொகையை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டது.
ரூ.2000 கோடி...
இதுதொடர்பாக இந்திய ரயில்வே ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் எம்.ராகவய்யா கூறுகையில், கடந்த ஆண்டில் ரயில்வே ரூ.16,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், சாதனை அளவாக 1,161 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. எனவே, 80 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். எனினும், 78 நாள் போனஸுக்கு இறுதியில் ஒப்புக் கொண்டோம் என்றார். ரயில்வே துறையில் அதிகாரமில்லாத பணிகளில் உள்ள 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படவிருக்கிறது. இதனால், அரசுக்கு ரூ.2,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.