முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழா: புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வழங்கினர்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.

அடையாள அட்டை...

அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா கட்சி தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடையாள அட்டையினை வழங்கினார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அடையாள அட்டை வழங்கினர். தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடையாள அட்டைகளை வழங்கினார்.

கட்டுக்கோப்பான இயக்கம்

அப்போது முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். அவர் தொடங்கிய காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு அண்ணா கண்ட கனவை நனவாக்க தன்னையே இயக்கத்திற்கு அர்ப்பணித்து கொண்டு நாட்டு மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் தமிழகத்தில் உருவாக்கி அண்ணாவின் கனவை நிறைவேற்றினார். எம்.ஜி.ஆர். இருக்கும்போது எவ்வளவு துன்பத்தை கொடுத்தார்களோ அதே துன்பத்தையும் இடர்பாடுகளையும் ஜெயலலிதாவுக்கும் கொடுத்தார்கள். அதையும் அவர் தாங்கிக் கொண்டு தன் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில் கூட எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தைக் காத்து அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற பணிகள் தொடர வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்து கட்டுக்கோப்பான இயக்கம் அ.தி.மு.க. என்பதை நாட்டுக்கு பறைசாற்றினார்.

வரலாற்று சிறப்புமிக்கது

அ.தி.மு.க.வுக்காக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை எல்லாம் தாண்டி அதனை எல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி அமைத்தார். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்றி அ.தி.மு.க. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அல்ல, வெளிநாடுகளிலும் பரவுகின்ற அளவிற்கு கட்சியை ஜெயலலிதா வளர்த்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகு பல்வேறு சதியாளர்கள் சதி செய்தார்கள். அதனை எல்லாம் இங்கு இருக்கின்ற அத்தனை பேரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு அதனை வீழ்த்தி இருபெரும் தலைவர்களின் லட்சியத்தை நாம் நிறைவேற்றி வருகிறோம். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. 

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக அ.தி.மு.க.வுடைய புதிய உறுப்பினர் உரிமை சீட்டு புதுப்பிக்கும் பணி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தொடங்கி சுமார் ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்களை இன்றைக்கு சேர்த்திருக்கிறோம். ஜெயலலிதா இருக்கும் போது 5 ஆண்டுக் காலத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள். இப்போது இந்தப் பணி தொடங்கி இந்த குறுகிய காலத்திலேயே ஒரு கோடியே 10 லட்சம் பேரை அ.தி.மு.க.வில் சேர்த்திருக்கிறோம். ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள் புதுப்பித்துள்ளார்கள். புதியதாக அ.தி.மு.க.வில்இணைந்தவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள். மொத்தம் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்திற்கு 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் கழகத்திலே  உறுப்பினர்களாக இணைந்து அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்கும் பணியை இன்று துவக்கியுள்ளார்கள்.

50 லட்சம் உறுப்பினர்கள்

இன்றும் 6 மாதத்திலே கிட்டத்தட்ட 50 லட்சம் உறுப்பினர்கள் சேருவார்கள். ஜெயலலிதா இருக்கின்ற காலத்தில் எப்படி 1.50 கோடி உறுப்பினர்கள் இருந்தார்களோ, அதை விடக் கூடுதலான உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த அளவிற்கு இந்த இயக்கத்தின் மீது அ.தி.மு.க. மீது பொதுமக்களும் பற்றும் பாசமும் அன்பும் வைத்திருக்கிறார்கள். இருபெரும் தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எஃகு கோட்டையாக....

முன்னதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்கள் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம்தான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. ஏனென்றால் 28 ஆண்டு காலம் அ.தி.மு.க. பொதுசெயலாளராக ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை,  வேதனைகளை தாங்கி 1.50 கோடி தொண்டர்களை கொண்ட அசைக்க முடியாத எஃகு கோட்டையாக உருவாக்கி தந்துள்ளார். 

60 லட்சம் புதிய...

தொண்டர்களால் அ.தி.மு.க. வழிநடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் பூர்த்தி செய்து கொடுத்த 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 படிவம் பெறப்பட்டது. அதாவது மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 52 ஆயிரத்து 25 ஆகும். பிற மாநிலங்களில் 3583 படிவங்கள் பெறப்பட்டது. அதன் மூலம் 89 ஆயிரத்து 575 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மொத்தத்தில் அ. தி.மு.க. புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 ஆகும். அதாவது இன்று வரை இவ்வளவு உறுப்பினர்கள் பதிவு

செய்திருக்கிறார்கள். 90 நாட்களில் நடந்த வரலாற்று சிறப்பு சாதனை இது. இப்போது 60 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் பணி துவக்கி வைக்கப்படுகிறது. மேற்கொண்டு சேர்ந்த உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பாடநூல் வாரியத் தலைவர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, எம்.பி. விருகை ரவி ஆகியோர். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து