பரமக்குடியில் வீடுகள் மற்றும் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலத்துடன் தொடங்கியது

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
11 paramakudi news

பரமக்குடி - பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் ஸ்ரீ நாகநாதசுவாமி - சவுந்தரநாயகி அம்மன் கோவில், பரமக்குடி அருள்மிகு முத்தாலம்மன் கோவில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோவில், ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில், எமனேசுவரம் வரதராஜப் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் கொலு மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனைகள் நடந்தன.இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
மேலும் பரமக்குடி வசந்த புரத்தைச் சேர்ந்த தம்பதியினர் நேரு கணேசன் - இந்துராணி.
இந்துராணி பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இவரது கல்வி சேவையை பாராட்டி தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
நல்லாசிரியர் இந்துராணி ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.இவர் ஆண்டுதோறும் நவராத்திரி காலத்தின் போது தனது வீட்டில் கொலு பொம்மைகள் அலங்கரித்து வைத்து நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.இதனைத் தொடர்ந்து இந்தாண்டு நல்லாசிரியர் இந்துராணி வழக்கம் போல் 100 க்கும் மேற்பட்ட பொம்மைகளை அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடத்தி வருகிறார்.இதனை அப்பகுதி மக்கள் மாலை நேரங்களில் வந்து கொலு அலங்காரத்தினை பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.
தொடர்ந்து 18 ம்தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில் பரமக்குடியில் வீடுகள் மற்றும் கோவில்களில் தினமும் அலங்கரித்து வைக்கப் பட்டுள்ள கொலுவினை திரளானவர்கள் கண்டு வணங்கிச் செல்கின்றனர்.
நவராத்திரி காலத்தில் கொலு  என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.
"ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலன்களையும் தருவேன்" என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.நவராத்திரியில் இச்சா சக்தி,ஞான சக்தி,கிரியா சக்தி என மூன்று சக்திகளின் அருளை பெற நவராத்திரி வழி செய்கிறது. கொலுமேடை 9படிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து