முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சுவரில் மோதிய விமானம் பைலட்டின் தவறு காரணமா? அதிகாரிகள் விசாரணை

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

திருச்சி, திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் ஐ.எல்.எஸ். ஆண்டனா மீது மோதியதற்கு பைலட்டின் தவறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

திருச்சியில் இருந்து துபாய்க்கு நேற்று முன்தினம் இரவு 1.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 130 பயணிகள், பைலட் மற்றும் பணியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 136 பேர் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் சிறிது தூரம் சென்று மேலே எழும்பி பறக்க தொடங்கும் போது மிகவும் தாழ்வாக பறந்தது. அப்போது ஓடுதளத்தின் அருகில் இருந்த ஐ.எல்.எஸ். ஆண்டனா (விமானத்தை தரையிறக்க வழிகாட்டும் கருவி) மீது பயங்கரமாக மோதியது. இதனால் விமானம் குலுங்கி நிலை தடுமாறியது.

என்றாலும் விமானி விமானத்தை உயரே கிளப்ப முயன்றார். அப்போது அந்த விமானம் எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீதும் பயங்கரமாக மோதியது. பயங்கர சத்தத்துடன் மோதியதால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதேபோல் விமானம் மோதியதில் 50 அடி நீளத்திற்கு விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர்களும் இடிந்து விழுந்தன. விமான நிலைய பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த முள்வேலிகளும் அறுந்து விழுந்தன.

விமான நிலையத்தின் அலுவலக ஊழியர்கள் துபாய் விமானம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதை கண்காணிப்பு கேமிராவில் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் பைலட் விமானத்தை நிறுத்தவில்லை. தரை இறக்காமல் தொடர்ந்து விமானத்தை மேலே இயக்கினார். டவர்கள் மற்றும் சுவரில் மோதியதால் விமானத்தின் முன்பகுதி, டயர் பகுதி ஆகியவை சேதம் அடைந்தன. இந்த சேதத்துடன் விமானம் வானில் பறக்க தொடங்கியது. விமானம் குலுங்கியதாலும் விபத்து நடந்ததுபோன்ற சத்தம் கேட்டதாலும் பயணிகள் கூச்சலிட்டனர். ஆனாலும் விமான பணியாளர்களும், பைலட்டும் பயணிகளை சமாதானப்படுத்தினர். விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை, பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என்றும் அவர்களிடம் பைலட் உறுதி கூறினார்.

இதற்கிடையே துபாய்க்கு புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் துபாய் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும் நீண்ட தூரம் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு துபாய் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. விமானம் பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது பைலட் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கேட்டார். ஆனால் துபாய் விமான நிலையம் அனுமதி மறுத்து விட்டது. விமானத்தின் டயர்கள் சேதம் அடைந்திருந்ததால் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என்பதால் துபாய் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

இதை அறிந்த பயணிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் பத்திரமாக தரையிறங்குமா? உயிர் தப்புவோமா? என்று பீதி அடைந்தனர். தொடர்ந்து 4 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே தவிப்பும், பதைபதைப்புமாக இருந்தனர். அவர்களை விமான பணிப்பெண்கள் தொடர்ந்து சமாதானப்படுத்தி வந்தனர். விமானம் மும்பையில் தரை இறங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், எனவே யாரும் பயப்பட தேவையில்லை, எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அவர்கள் பயணிகளுக்கு நம்பிக்கை ஊட்டினர். விமானம் வானில் 3 மணி நேரம் பயணித்த நிலையில் துபாயில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் வானிலேயே வட்டமடித்து பின்னர் மும்பை நோக்கி பறந்தது. நேற்று காலை 6.10 மணிக்கு அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் அனைவரும் துபாய் செல்வதற்கு அங்கு தயாராக மற்றொரு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 130 பயணிகளும் அந்த விமானத்தில் ஏறி துபாய் புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் ஓடு தளத்தில் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது பைலட்டின் கவனக்குறைவா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். விபத்தில் விமான நிலைய ஓடுதளத்தை ஒட்டியுள்ள ஐ.எல்.எஸ். ஆண்டனா மட்டுமின்றி விளக்குகளும் உடைந்து நொறுங்கியதோடு, ஓடுதளமும் சேதம் அடைந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று காலை விமான நிலையத்திற்கு வந்து பார்த்தார். மேலும் விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர் ப.குமார் எம்.பி., திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஆகியோரும் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் கூறுகையில், திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுதளத்தை விட்டு மேலே எழும்பும்போது ஏன் குறைந்த உயரத்தில் மிகவும் தாழ்வாக பறந்தது என பைலட்டிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து