நிர்மலா தேவி விவகாரம் கவர்னர் மாளிகை விளக்கம்

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      தமிழகம்
nirmala devi 2018 04 16

சென்னை, நக்கீரன் கோபால் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக கவர்னர்  மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

நக்கீரன் கோபால் கைது

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நக்கீரன் இதழில், கட்டுரை வெளியானது. இதில் கவர்னரை தொடர்புபடுத்தி எழுதியிருந்ததால், கவர்னர் மாளிகை தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரம் தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கவர்னர் மாளிகை நேற்று விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் மாளிகை விளக்கம்

நிர்மலா தேவி விவகாரத்தில்  சட்டப்பூர்வ விசாரணை நடந்து வந்தால் 6 மாதத்திற்கும் மேலாக கவர்னர் மாளிகை மவுனம் காத்து வந்தது. ஆனால் இந்த விஷயத்தில் உண்மையை அறியாமல் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் கவர்னர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை. கவர்னரையோ, அவரது செயலாளர் மற்றும் அதிகாரிகளையோ அவர் சந்திக்கவில்லை. மதுரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கவில்லை. நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை சரிபார்க்காமல் நக்கீரனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் நக்கீரனில் வந்த தகவல்களை சிலர் ஆதரிக்கின்றனர். அடிப்படை ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் மனு தரப்பட்டது. கவர்னருக்கு நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்து கொள்ள முடியாது. கண்ணியத்தை கெடுக்கும் செயல்களுக்கு கவர்னர் அலுவலகம் ஒருபோதும் அடிபணியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து