Idhayam Matrimony

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சா்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்றவர்கள் முதல்வர் எடப்பாடி மீது குற்றம் சுமத்துவதா? அ.தி.மு.க. கடும் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சர்க்காரியா கமிஷனால் சான்றிதழ் பெற்றவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் சொல்ல தகுதியற்றவர்கள் என்று தி.மு.க. மீது முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் காட்டமாக குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையில் மேல்முறையீடு குறித்து நான் சொல்லாததை சொன்னது போல் மு.க. ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அதாவது சி.பி.ஐ. விசாரணை குறித்து லஞ்சஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என்ற கருத்தை நான் கூறியதாக சொல்லி இருக்கிறார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது. இதிலே தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யும் என்று நான் கூறியதாக கூறி இருப்பது தவறு. என்னிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர்கள் ஒருவேளை மேல் முறையீடு செய்யலாம் என்று பொருள்பட த்தான் நான் சொன்னேன். அதாவது மேல்முறையீடு செய்யலாம். செல்லாமலும் இருக்கலாம் என்பதுதான் இதன் தத்துவம்.

லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரை அது பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்கிற உணர்வு அவர்களுக்கு வரும் போது மேல்முறையீடு செல்வதா? செல்ல வேண்டாமா? என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதில் ஆட்சிக்கு சம்பந்தம் இல்லை. அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. அப்பழுக்கற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தமில்லை. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் தற்போதைய நிலை.மேல் முறையீடு என்பது லஞ்ச ஒழிப்புத்துறை எடுக்க வேண்டிய முடிவு. எந்த விசாரணையாக இருந்தாலும் ஆரம்ப கட்ட புலனாய்வு என்று உண்டு. இரண்டாவது ஆழமான ஆழ்ந்த விசாரணைக்கு உட்பட்ட புலனாய்வு என்பது இரண்டாவது கட்டம். இதுதான் எந்த மாநிலத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறையாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை. இந்த வழக்கின் ஆரம்ப கட்ட புலனாய்விலே ஒட்டன்சத்திரத்திலிருந்து அவினாசி சாலை டெண்டரை பொறுத்தவரை இது ஆன்லைன் டெண்டர். கடந்த கால தி.மு.க. ஆட்சியில் விடப்பட்டடெண்டர் எல்லாம் பாக்ஸ் டெண்டர். பாக்ஸ் டெண்டரில் எந்த விலையைக் குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்குத் தெரியும். வேண்டியவர்களுக்குச் சலுகை செய்ய வேண்டிய நிலை பாக்ஸ் டெண்டரில் உண்டு. இதுபோன்ற பல தவறுகள் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது இருப்பது ஆன்லைன் டெண்டர். யார் டெண்டர் போடுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதில் எந்தத் தவறும் நடக்க முடியாது. தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆன்லைன் டெண்டர் இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசு பாராட்டுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தவறு நடக்காத நேர்மையான நிர்வாக அணுகுமுறை பாராட்டப்படுகிறது.

இந்தியாவில் முதல்முறையாக ஆன்லைன் டெண்டருக்கு வங்கி உத்திரவாதம் தருகிறது. இதன் மூலம் யார் டெண்டர் போட்டுள்ளார்கள் என்று தெரிந்து விடும் என்பதால் அந்த முறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றி விட்டார். மாற்றியது நேர்மையின் சின்னமான முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். ஆர்.டி.ஜி.எஸ். மூலம் யார் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்று ஆண்டவனுக்கே தெரியாது. டெண்டரை கமிட்டி பிரித்தால் மட்டுமே தெரிய வரும். உலக வங்கியின் திட்டம் இது. சாலை குறித்து டெண்டர் எடுப்பவர்கள் அளித்த டெக்னிக்கல் விஷயங்கள் சரியாக இருந்தால் மட்டுமே டெக்னிக்கல் கமிட்டி இதற்கு ஒப்புதல் தரும். இதனைத் தொடர்ந்து நிதி கமிட்டி இந்த டெண்டரை பிரிக்கும் போதுதான் யார் டெண்டர் போட்டுள்ளார்கள் என்பது தெரிய வரும். தற்போது எதிர்க்கட்சி குற்றச்சாட்டியுள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 10 கோடிக்குப் பணியை கேட்டுள்ளது. இதை விடக் குறைவாக யாரும் டெண்டர் கேட்கவில்லை. இந்தப் பணி ஒதுக்கீடு குறித்து முதல்வரோ மற்ற அமைச்சர்களோ கையெழுத்து போடுவதில்லை. உலக வங்கிக்குச் சென்று அவர்கள் தான் முடிவு செய்து தருகிறார்கள்.

தற்போது உள்ள ராமலிங்கம் நிறுவனத்திற்கு 2009-ல் தி.மு.க. ஆட்சியில் டெண்டர் அளித்துள்ளார்கள். தற்போது இவர்கள் குறிப்பிடும் ஒட்டன்சத்திரம் சாலைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி ரூ. 10 கோடிக்கு டெண்டர் தருகிறது. ஆனால் இதே சாலைக்கு தி.மு.க. ஆட்சியில் 33 கோடி ரூபாய்க்கு பாக்ஸ் டெண்டர் தந்திருக்கிறார்கள். இது உலக மகா ஊழல் இல்லையா? தி.மு.க. ஆட்சியில் ஊழல் விஞ்ஞான ரீதியில் செய்யப்பட்டுள்ளது என்று சர்காரியா கமிஷன் குறிப்பிட்டது போல மிக அதிக அளவுக்கு தி.மு.க. தந்துள்ளது. ஆனால்எடப்பாடி ஆட்சியில் மிகக் குறைந்த அளவுக்கே டெண்டர் தரப்படுகிறது. எனவே இந்தக் குற்றச்சாட்டு நியாயமில்லை என்பது ஆரம்ப கட்ட விசாரணையிலே தெரிந்து விடும். இது போன்ற டெண்டர்களை உறவினர்களுக்கு அளித்து விட்டார்கள் என்று குற்றச்சாட்டுகிறார்கள். இந்த ராமலிங்கம் நிறுவனத்திற்கு தி.மு.க . ஆட்சியில் 10 டெண்டர்களை அளித்து அதிக விலைக்கு டெண்டர்களை வழங்கியுள்ளார்கள். ஆனால் தற்போது 10 கோடிக்கு மட்டுமே டெண்டர் தரப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை பார்த்தாலே இதில் தவறே நடக்கவில்லை என்று தெரிய வரும். உறவினருக்கு டெண்டர் அளித்துள்ளார்கள் என்று குற்றச்சாட்டுகிறார்கள். 1962-ம் ஆண்டில் அமைச்சர்களுக்கு யார் உறவினர் என்று மத்திய அரசு எல்லா மாநிலத்திற்கும் பொருந்துகிற வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. இதன் அடிப்படையில் தி.மு.க. குறிப்பிடும் நபர் உறவினர் பட்டியலில் வரவில்லை. இதனை நீதிமன்றம் பார்த்திருக்க வேண்டும். இரண்டாவது டெண்டர் ஆர். டி.ஜி.எஸ். மூலம் போடப்பட்டுள்ளது.

தற்போது அளிக்கப்பட்டது நேர்மையான டெண்டர் என்பதை ஆவணங்களே பேசும். இந்த நிலை இருக்கும் போது ஆரம்ப நிலையிலே இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்திருக்க வேண்டும். ஆட்சி மீது களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக குற்றம் சொல்கிறார்கள். குற்றத்தைச் சொல்லுவது யார். சர்காரிய கமிஷனில் விஞ்ஞான ரீதியிலான ஊழல் செய்தவர்கள் என்று சான்றிதழ் பெற்றவர்கள் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கருணாநிதியின் மகன் ஸ்டாலின், சகோதரி செல்விதான் ஏஜென்டாக இருந்தார்கள். அந்த ஏஜென்சிக்கு மட்டும் 280 கோடி சென்றிருக்கிறது இப்படிப்பட்ட பெரிய தவறை செய்து விட்டு அதனை மறைக்க இது போன்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள். இது போல தலைமை செயலக கட்டிட விவகாரம். இதில் தி.மு.க. மாபெரும் ஊழல் செய்துள்ளது. இந்த வழக்கு நீண்டு கொண்டு சென்ற நிலையில் தற்போது நீதிமன்றம் இதனை விரைவுப்படுத்தியுள்ளது. இதனை மறைக்கத்தான் எங்கள் மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள். 15 ஆண்டு காலம் டெல்லியில் முக்கிய பதவிகளில்இருந்து கொண்டு பல்வேறு ஊழல்களைச் செய்தவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு தகுதியில்லாதவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து